புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்புக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்தாண்டு நவம்பர் மாதம் கார் குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர், இதுதொடர்பாக என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்தது.
அதில் கூறியிருப்பதாவது: கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த மருத்துவர் உமர் முகமதுவுக்கு, ஜசிர் பிலால் வானி என்பவரை மருத்துவர் அடீல் அகமது அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இவர் வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழில் உதவிகளை அளித்துள்ளார்.அவர் தயாரித்த கார் வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கலாம். இவர் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்' என்ற இயக்கத்தை சேர்ந்தவர்.
இவரும் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பல முறை தங்கி வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளார். வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை மருத்துவர் அடீல் அகமது, ஜசிர் பிலால் வானிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
மருத்துவர் உமர், ராக்கெட் குண்டுகள் குறித்து ஆய்வு செய்து அதன் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். ராக்கெட் குண்டுகள் தயாரிப்பது எப்படி மற்றும் அதன் வெடிமருந்து கலவை என்ன விகிதத்தில் இருக்க வேண்டும் என்று யூடியூப் மற்றும் சாட்ஜிபிடி-ல் ஜசிர் தேடி விவரங்களை சேகரித்துள்ளார்.
இந்த தீவிரவாத கும்பல் வெடிகுண்டுகள் தயாரிக்க ஏஐ தளங்களை தவறாக பயன்படுத்தியுள்ளது. இவர்கள் தயாரித்த ராக்கெட் குண்டுகள், ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் வனப்பகுதியில் சோதித்து பார்த்துள்ளனர்.
இவர்களின் ஆயுதங்கள் கிட்டத்தட்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை போல் மிக நுணுக்கமாக உள்ளன. விரிவான அறிவியல் மற்றும் தடயவியல் ஆய்வு மற்றும் புலன் விசாரணை மூலம் தீவிரவாதிகளின் மிகப் பெரிய சதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு என்ஐஏ தெரிவித்துள்ளது.