மும்பை: மும்பை உயர் நீதிமன்றத்தில் டாக்ஸி ரிக்சா ஓலா-உபேர் ஆண்கள் டிரைவர் யூனியன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தற்போது ரம்ஜான் மாதம் நடைபெற்று வருகிறது. இதனால், விமான நிலைய வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டது.
இந்த மனு நேற்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.பி.கொலபாவாலா, பிர்தோஷ் பூனிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: ரம்ஜான் விரதம் என்பது இஸ்லாம் மதத்தின் ஒருங்கிணைந்த பகுதி. எனினும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி தர முடியாது. எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுகை நடத்துவது என்பது மத உரிமை கிடையாது. குறிப்பாக விமானநிலையம் எதிரே உள்ள பகுதியில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது.
பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டி இருப்பதால் அந்த இடத்தில் தொழுகை நடத்த உத்தரவிட முடியாது. விமான நிலையப் பாதுகாப்பின் அம்சத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழுகை நடத்த விமான நிலையத்துக்கு அருகில் ஒரு கட்டிடத்தை வாங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. மதம் அல்லது வேறு எந்த விஷயமோ பாதுகாப்பு தான் முதலில் வருகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.