இந்தியா

“எங்கள் தரப்பு கருத்துகளையும் கேளுங்கள்” - காயமடைந்த டெல்லி காவல்துறையினர் குடும்பத்தினர் வேண்டுகோள்

பால. மோகன்தாஸ்

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தின்போது காயமடைந்த காவலர்களின் தரப்பு குறித்தும் அரசியல் தலைவர்கள் கேட்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த 20-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. காவல்துறையின் அனுமதி இன்றி போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்ற நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தின்போது காயமடைந்த காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் இன்று (ஜூலை 31) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டெல்லி உதவி காவல் ஆணையரின் (ஏசிபி) மனைவி, “ஜூலை 20 அன்று இரவு எனது கணவர் தாமதமாக, காயங்களுடன் வீடு திரும்பிய தருணம் எனக்கும் எனது இரண்டு வயது மகளுக்கும் மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் அளிப்பதாக இருந்தது. டெல்லி காவல்துறை ஊழியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மற்றவர்களும் என்னுடன் இங்கு வந்துள்ளனர். நாங்கள் எங்கள் துயர அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

டெல்லி பல்கலைக்கழக மாணவியும், காயமடைந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மகளுமான குஞ்சல், “போராட்ட நாட்களில் என் தந்தை முக்கிய தடுப்புகளுக்கு அருகில் முன்வரிசையில் நின்றிருந்தார். இரவில் வீடு திரும்பும்போதெல்லாம், இது மாணவர் போராட்டமாக தெரியவில்லை. பல சமூக விரோத சக்திகள் இதில் இணைந்துவிட்டன என்று என் தந்தை கூறுவார்.

ஜூலை 25ம் தேதி அன்று, ஜந்தர் மந்தரில் உள்ள மேடைக்கு அருகில் ஒரு கும்பல் எனது தந்தையை இழுத்துச் சென்று கிட்டத்தட்ட அடித்துக் கொல்லும் அளவுக்கு தாக்கியது. அவர் சுமார் 4 மணி நேரம் மருத்துவமனையில் சுய நினைவின்றி இருந்தார். இரவு 10 மணி அளவில் கச ஊழியர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். சீருடை முழுவதும் ரத்தத்தால் சிவந்திருந்தது.

அவரை அப்படிப் பார்த்தது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. எப்படி இது நடந்தது என்று நான் அவரை கேட்டபோது, ஒன்றுமில்லை. பணியின்போது சிறிய காயங்கள் ஏற்படுவது சகஜம்தான் என்று அவர் பதிலளித்தார். அவரது தலையில் 4 தையல்கள் போடப்பட்டிருந்தன.

மறுநாள், எனது தந்தையை தாக்கியவர்களே, தங்கள் குற்றத்தை மறைத்துவிட்டு அனைத்து காவலர்கள் மீதும் புகார் அளிக்க உச்ச நீதிமன்றத்தை நாடப்போகிறார்கள் என்பதை அறிந்தபோது நான் மிகவும் வேதனைப்பட்டேன். என் தந்தைக்காக நீதியைப் பெற நானும் செல்ல வேண்டும் என்று உணர்ந்தேன். மற்ற காவலர் குடும்பத்தினரிடம் இருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்தது.” என தெரிவித்தார்.

போராட்டக்காரர்களால் காயமடைந்த மற்றொரு உதவி ஆய்வாளரின் மனைவி சீமா கூறுகையில், “ஜூலை 20 அன்று வழக்கம்போல் வீட்டில் இருந்து மதிய உணவுடன் அவர் கிளம்பிச் சென்றார். காலை 11 மணி அளவில் நான் அவரிடம் தொலைபேசியில் பேசினேன். ஜந்தர் மந்தரில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதாகவும் கூறினார்.

நான் மிகுந்த கவலையுடன் பத்திரமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். மாலை 7 மணிக்கு அவரை தொடர்பு கொண்டபோது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். கூட்டம் மிகவும் ஆக்ரோஷமாக மாறியதாகவும், அவர்களுடன் சமூக விரோத கும்பலும் கலந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

அவர்கள் பூந்தொட்டிகள், செருப்புகள், காலணிகள், கற்களைக் கொண்டு காவலர்களை தாக்கி காயப்படுத்தினர். இது ஒரு வீடியோ காட்சியிலும் பதிவாகியுள்ளது. என் கணவருக்கு பணி நிமித்தமாக வழங்கப்பட்டிருந்த தலைக்கவசம் உடைந்து போயிருந்தது. அவரது தலைமையில் ஒரு கல் பட்டிருந்தாலும் இன்று அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார். இதை அவர் விவரிப்பதைக் கேட்கும்போது என் உள்ளம் நடுங்கியது.

அரசியல் தலைவர்கள் எங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும். மாணவர் போராட்டம் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டதாகவும், மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகவும் ஒரு தரப்பு செய்தி மட்டுமே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இது உண்மையல்ல. இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு மக்கள் பிரதிநிதிகளை நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT