இந்தியா

“இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்” - கட்சிப் பெயர், சின்னம் முடக்கத்துக்கு மம்தா கண்டனம்

மோகன் கணபதி

கொல்கத்தா: “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரும், சின்னமும் முடக்கப்பட்ட இந்த நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு நாள்” என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “இந்திய ஜனநாயக வரலாற்றில் இந்த நாள், ஒரு கருப்பு நாள் என்று நாங்கள் கருதுகிறோம். நமது நாட்டில் நடப்பவை மிகவும் திரதிருஷ்டவசமானவை, அரசியலமைப்புக்கு முரணானவை, சட்டவிரோதமானவை, ஜனநாயகத்துக்கு எதிரானவை. ஓர் அரசியல் கட்சியின் (பாஜக) அகங்காரத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பாரபட்சமான பழிவாங்கும் நடவடிக்கை இது.

பெயரையும் வைத்திருக்க விட மாட்டேன், சின்னத்தையும் வைத்திருக்க விட மாட்டேன் என்று அவர்கள் முன்பே கூறி இருந்தார்கள். இவ்வாறு கூறுவதற்கு இவர்கள் யார்? இன்று அவர்கள் அதிகாரத்தில் இருக்கலாம், நாளை இல்லாமல் போகலாம். அவர்கள் தங்கள் எல்லைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியை என்னால் கைவிட முடியாது. இது அவர்களுக்குத் தெரியவில்லை. நான் இந்த உலகை விட்டுச் செல்லும் வரை அது என்னுடனேயே இருக்கும். இதை எதிர்த்துப் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

முதலில் அவர்கள் உத்தவ் தாக்கரேவின் கட்சியை உடைத்தார்கள். பிறகு என்சிபி கட்சியை உடைத்தார்கள். அதன்பிறகு பாஜகவை ஆதரிக்குமாறு எங்களுக்கு பல மிரட்டல்கள் வந்தன. ஆனால், நாங்கள் அதற்கு உடன்படவில்லை. நாட்டின் நலன் மற்றும் மக்களின் நலன் கருதியே நாங்கள் அந்த முடிவை எடுத்தோம்.

மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்டது போலியான தேர்தல். மூன்று அல்லது நான்கு சுற்றுகளுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்களை வெளியேற்றி, முழு செயல்முறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதன் பின்னணியில் சூத்திரதாரியாகச் செயல்பட்டது யார் என்பதை நாங்கள் குறிப்பிடாமல் இருப்பது எங்கள் கண்ணியத்தின் வெளிப்பாடு.

பாஜக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இண்டியா கூட்டணியில் ஒற்றுமை நிலவ வேண்டும். இடைத்தேர்தல் நடைபெற உள்ள நந்திகிராம் மற்றும் ரெஜினகர் ஆகிய இரு தொகுதிகளில் நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கப் போகிறோம். இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்படும் முடிவு. ரெஜினகர் தொகுதி குறித்து நான் பின்னர் முடிவெடுப்பேன். அசாம் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை” என தெரிவித்தார்.

முன்னதாக, மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலை அடுத்து, திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டது. மம்தா பானர்ஜி தலைமைக்கு எதிராக, சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் ஒரு அணி உருவானது. அந்த அணி தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என உரிமை கோரி வருகிறது.

இந்நிலையில், நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இரு பிரிவும் தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரின.

இதையடுத்து, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயரையோ அதன் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயரையும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயரையும் ஒதுக்கியுள்ளது.

இதேபோல், மம்தா பிரிவுக்கு கால்பந்து வீரர் சின்னத்தையும், ரிதப்ரதா பிரிவுக்கு உறை (Envelope) சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது.

SCROLL FOR NEXT