இடது: ரூப்குமாரி சவுத்ரி | வலது: வானதி சீனிவாசன்

 
இந்தியா

பாஜக தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு: 65-ல் 12 பேர் பெண்கள் - வானதி சீனிவாசன் விடுவிப்பு

பாஜக தேசிய மகளிரணி தலைவாக சத்தீஸ்கர் எம்.பி. அறிவிப்பு

அனலி

புதுடெல்லி: பாரதி ஜனதா கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட 65 பேரில் 12 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்தீஸ்கர் பாஜக எம்.பி. ரூப்குமாரி சவுத்ரி அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் வெளியிட்ட அறிவிப்பின் விவரம்:

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஆந்திர மாநில முன்னாள் பாஜக தலைவர் டி.புரந்தரேஸ்வரி, குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறையின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பார்தி ப்ரவீன் பவார், வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, ரேகா வர்மா, டாக்டர் மதுசந்தகர் ஆகியோர் பாஜக தேசிய துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசுந்தரா ராஜே, ரேகா வர்மா அப்பதவியில் மீண்டும் நியமனமாகியுள்ளனர்.

பாஜக தேசிய செயலாளர்களாக கவிதா பட்டிதார், ஃபங்னான் கோன்யாக், சங்கீதா யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய மகளிரணித் தலைவராக தமிழகத்தின் வானதி சீனிவாசன் இருந்த நிலையில், பாஜக எம்.பி. ரூப்குமாரி சவுத்ரி அந்தப் பதிவியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பாஜக சமூக வலைதள தேசிய இணை ஒருங்கிணைப்பாளராக ப்ரீத்தி காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் முன்பிருந்த தேசிய நிர்வாகிகள் பட்டியலை விட இப்போதுள்ள நிர்வாகிகளில் பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய நிர்வாகிகள் குழுவில் தேசியச் செயலராக எந்தவொரு பெண்ணும் இருந்தது இல்லை. இந்த முறை ஸ்மிருதி இரானி தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றி அமல்படுத்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட பாஜக தேசிய அளவிலான நிர்வாகிகளில் 65-ல் 12 பேர் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் சுதந்திர தின உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் குறிப்பிட்ட அவர், மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதப் பிரதிநிதித்துவம் கிடைப்பதையும், இந்தியாவின் கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்வதையும் அரசியல் கட்சிகள் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT