படம்: பிடிஐ
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 207 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றிருக்கிறது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகள் கிடைத்துள்ளன.
மேற்குவங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவியது.
ஒரு தொகுதியில் மறுதேர்தல்: கடந்த 29-ம் தேதி மேற்குவங்கத்தின் பால்டா தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் அதிக முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பால்டா தொகுதியில் மொத்தமுள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் மே 21-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பால்டா தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது. பல்வேறு தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைவான வாக்குகளே கிடைத்தன. நள்ளிரவு நிலவரப்படி பாஜக 207 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன.
காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் 1, ஏஐஎஸ்எப் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. திரிணமூல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய ஹுமாயூன் கபீரின் ஏஜேயுபி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மம்தா அதிர்ச்சி தோல்வி: பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இறுதியில் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரிக்கும் திரிணமூல் வேட்பாளர் பபித்ரா கர்ருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 1,27,301 வாக்குகளை பெற்று சுவேந்து வெற்றி பெற்றார். பபித்ரா கர்ருக்கு 1,17,636 வாக்குகள் கிடைத்தன.
மருத்துவ மாணவி தாய் வெற்றி: கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டில் கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த மாணவியின் தாய் ரத்னா தேவ்நாத், பாஜக சார்பில் பனிஹாட்டி தொகுதியில் போட்டியிட்டார். அவர் 56,167 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தீர்த்தங்கர் கோஷ் 35,704 வாக்குகள் பெற்றார்.
சந்தேஷ்காளி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரேகா பத்ரா, பாஜக சார்பில் ஹிங்கல்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 89,122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திரிணமூல் வேட்பாளர் அனந்த சர்க்காருக்கு 85,830 வாக்குகள் கிடைத்தன.
மேற்குவங்கத்தில் வன்முறை: பவானிபூர் தொகுதியில் பதிவான வாக்குகள் பவானிபூர் உள்ள பள்ளியில் எண்ணப்பட்டன. அங்கு முதல்வர் மம்தாவும் சுவேந்து அதிகாரியும் ஒரே நேரத்தில் சென்றனர். அப்போது திரிணமூல், பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினர்.
கூச் பெகர் பகுதியில் பாஜக, திரிணமூல் தொண்டர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேற்குவங்கத்தின் அசன்சோல் அருகே ஜமுரியா பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்தனர். இதில் திரிணமூல் அலுவலகம் எரிந்து நாசமானது. உள்ளூர் பாஜக தொண்டர்கள் தீ வைத்திருப்பதாக திரிணமூல் குற்றம் சாட்டி உள்ளது. இதேபோல மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து மேற்குவங்கத்திலேயே முகாமிட்டு இருப்பதால் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.
பாஜக வெற்றியின் பின்னணி: பாஜக வெற்றியின் ரகசியம் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 38.4 சதவீத வாக்குகளை பெற்று 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சி 45.46 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலைவிட அந்த கட்சி 7 சதவீத வாக்குகளை மட்டுமே கூடுதலாக பெற்றிருக்கிறது. ஆனால் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் கூடுதலாக 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது.
பாஜக கடந்த முறை வெற்றி பெற்ற 77 தொகுதிகளில் 76-ஐ தக்க வைத்துள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் தோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் கூடுதலாக 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கடந்த 2021 பேரவைத் தேர்தலில் திரிணமூல் 48.5 சதவீத வாக்குகளை பெற்றது.
தற்போதைய தேர்தலில் அந்த கட்சி 40.81 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் 7.69 சதவீத வாக்குகளை திரிணமூல் இழந்திருக்கிறது. இதன்காரணமாக 125-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பறிகொடுத்திருக்கிறது. இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.