புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மூன்றாவது முறையாக மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக புதிய சாதனை படைக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மதுராவில் கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதையடுத்து, தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், “வாரிசு அரசியல், சாதியவாதம், மோசமான சட்டம் - ஒழுங்கு சூழல் ஆகியவற்றுக்கு காங்கிரஸும், சமாஜ்வாதியுமே காரணம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள பாஜக தொண்டர்களின் உழைப்பாலும், 'டபுள் என்ஜின்' அரசின் சாதனைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தாலும் பாஜக மீண்டும் மக்களின் ஆசியைப் பெறும்.
மூன்றாவது முறையாக முழுமையான மற்றும் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கப்போவது உறுதி. இதில், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.
இண்டியா கூட்டணி ஆட்சியிலோ அல்லது சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியிலோ, உத்தரப் பிரதேசத்திலோ அல்லது வேறு எந்த மாநிலத்திலோ இத்தகைய நல்லாட்சியை யாராவது கண்டிருக்க முடியுமா?
இன்று உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்கிறது. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸின் அராஜகம், சீரழிந்த சட்டம் - ஒழுங்கு நிலை, ஊரடங்குகள், கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மக்கள் முன்வைப்போம்.
‘ஒரு மாவட்டம், ஒரு மாபியா’ என்பதே சமாஜ்வாதி கட்சியின் அடையாளமாக மாறியிருந்தது. அவர்களின் அடியாட்கள் காவல் நிலையங்களைக் கூட தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வேலைவாய்ப்பு ஆணையங்களிலும் அவர்கள் குழப்பத்தை விளைவித்தனர்.
தகுதியற்ற ஒருவரை தலைவராக நியமித்து, அந்த ஆணையங்களைக் கைப்பற்றி, தங்களுக்கு வேண்டியவர்களை வலுக்கட்டாயமாகப் பணியமர்த்த முயன்றனர். தேர்வே எழுதாத நபர்களுக்குக் கூட அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
லக்னோவின் எச்சிஎல் டெக் வளாகாத்தில் 2017-இல் வெறும் 100 பேர் மட்டுமே பணியாற்றினர். இன்று 18,000 இளைஞர்கள் அங்கு பணிபுரிகின்றனர். அங்கு பணிபுரியும் பல பெண்கள் இரவு 2 மணிக்கு வேலை முடிந்து இருசக்கர வாகனங்களில் வீடு திரும்புகின்றனர்.
இதற்கு பெண்கள், ‘என்ன பயம்? உபியில் இப்போது எந்தச் சட்டவிரோதச் செயல்களும் இல்லை’ என பதில் அளிக்கின்றனர். இந்த பதில், மாநிலத்தில் மேம்பட்டுள்ள சட்டம் - ஒழுங்கு சூழலுக்கும், அவர்கள் மீது காட்டப்படும் மரியாதைக்குமான சான்றாகும்.
பாதுகாப்பான சூழல் உருவானதன் விளைவாக, உத்தரப் பிரதேசத்தில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எச்சிஎல் நிறுவனம், பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, மாநிலத்தில் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி அலகை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
2017-க்கு முன்பு, அன்றைய சமாஜ்வாதி அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திய போதிலும், ஒரு முதலீட்டாளர் கூட லக்னோவுக்கு வர முன்வரவில்லை.
இன்று, கலவரக்காரர்களுக்கு எந்தவித கவுரவமும் அளிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அம்பலப்படுத்தப்படுகிறார்கள்.
இன்று உத்தரப் பிரதேசத்தின் வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்குத் தீ வைப்பதற்கோ அல்லது பெண்களின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிப்பதற்கோ யாருக்கும் அனுமதி இல்லை. இதுவே எங்கள் மாநிலத்தின் புதிய பிம்பம்.” என தெரிவித்துள்ளார்.