கிருஷ்ணாநகர்: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாஜக பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு நேற்று முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தலில் வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. இதன்மூலம் மக்கள் மாற்றத்தை விரும்புவது தெளிவாகிறது. இந்த தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறும்.
10 வாக்குறுதிகள்
அண்மையில் மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் ஜால்முரி (கார பொரி) சாப்பிட்டேன். இந்த தின்பண்டத்தை விரும்பி சாப்பிட்டது நானாக இருந்தாலும் அதில் இருந்த காரத்தை திரிணமூல் காங்கிரஸார் உணர்ந்தனர்.
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும் மசோதாவை மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் தோற்கடித்தது. இதற்குப் பெண்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இந்த நேரத்தில் மேற்கு வங்க பெண்களுக்கு 10 வாக்குறுதிகளை அளிக்க விரும்புகிறேன்.
1) மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்ததும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.
2) ஒவ்வொரு வட்டத்திலும் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.
3) மேற்கு வங்க காவல் துறையில் பெண்கள் அதிகளவில் சேர்க்கப்படுவார்கள்.
4) பெண்களின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.3,000 என்ற வகையில் ஆண்டுதோறும் ரூ.36,000 நிதியுதவி வழங்கப்படும்.
5) பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவிகளுக்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்படும்.
6) கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும்.
7) குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காகத் தலா ரூ.36,000 வழங்கப்படும்.
8) லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். பெண்கள் தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
9) பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.
10) பிஎம் அவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படும்.
பாஜக ஆட்சி அமைத்தால் இந்த 10 வாக்குறுதிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். மேற்கு வங்கத்தை 15 ஆண்டுகள் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. ஆனால், மேற்கு வங்க மாநிலம் இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மேற்கு வங்க அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவி உள்ளது. அரசு வேலைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு நிலத்தை வாங்க வேண்டும் என்றால் அதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அண்டை நாட்டில் இருந்து ஊடுருவல்காரர்கள் மேற்குவங்கத்தில் நுழைந்து வருகின்றனர்.
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்கும் போது ஊடுருவல் முழுமையாக தடுக்கப்படும். இரட்டை இன்ஜின் ஆட்சியால் மாநிலம் அதிவேகமாக முன்னேறும். மேற்குவங்க மக்கள் மத்தியில் அச்சம் நீங்கிவிட்டது. பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களித்து வருகின்றனர். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது மேற்குவங்கத்தில் தாமரை மலரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.