கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் | கோப்புப் படம்

 
இந்தியா

“தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து கேரளாவை ஆபத்தில் ஆழ்த்துகிறது காங்கிரஸ்” - பாஜக

மோகன் கணபதி

திருவனந்தபுரம்: ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து கேரளாவையும் இந்தியாவையும் காங்கிரஸ் ஆபத்தில் ஆழ்த்துவதாக கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கவலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு, தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ கட்சியும், ஜமாத் இ இஸ்லாமி-யின் வெல்ஃபேர் கட்சியும் ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு பெரும்பான்மை முஸ்லிம்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் அந்த அமைப்புக்கு நற்சான்றிதழ் வழங்கும் விதமாக அதனுடன் இணைவதா என்று முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ஜனநாயக அமைப்புகளுக்குள் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் ஊடுருவ அனுமதிக்கக்கூடாது என்று கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘‘கேரளாவில், ராகுல் காந்தியின் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து கேரளாவையும், இந்தியாவையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றன.

நமது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்குள் ஊடுருவி மதச்சார்பின்மை என்ற போர்வையில் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதிக்கக்கூடாது.

தீவிரவாதமும், பயங்கரவாதமும் சாதாரண மக்களை பாதிக்கின்றன; அவை நமது ஜனநாயகத்தையும் வாழ்க்கை முறையையும் அழிக்கின்றன. ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தால் இதன் உண்மையான தாக்கம் தெளிவாகும்’’ என தெரிவித்துள்ளார்.

தீவிரவாத இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்புக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ளதாகக் கூறப்படும் உறுதியான நிலைப்பாடு தொடர்பான ஒரு சமூக ஊடகப் பதிவை பகிர்ந்துள்ள ராஜீவ் சந்திரசேகர், ‘‘இதைப் படியுங்கள் - இஸ்லாமிய நாடுகள் கூட தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராக எவ்வளவு வலிமையான நிலைப்பாட்டை எடுக்கின்றன என்பதை இது காண்பிக்கும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT