இந்தியா

“ராகுலின் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியால் பாஜக நிலைகுலைந்து விட்டது”: காங். விமர்சனம்

வெற்றி மயிலோன்

மும்பை: புனேவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் ‘அரசியல் நகைச்சுவை’ என்று பாஜக விமர்சித்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு பாஜக ‘நிலைகுலைந்து போயுள்ளது’ என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் புனேவில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து விமர்சித்த பாஜக மகாராஷ்டிர துணைத் தலைவர் கேசவ் உபத்யே, “இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் கல்லூரிப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். மாணவர்களின் பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை காங்கிரஸ் ஒரு அரசியல் கூட்டமாக மாற்றிவிட்டது. ராகுல் காந்தியின் புனே நிகழ்ச்சி மற்றொரு அரசியல் நகைச்சுவையாக அமைந்தது.

ராகுல் காந்தியின் பேச்சில் வழக்கமான குற்றச்சாட்டுகள் இருந்ததே தவிர, காங்கிரஸ் கட்சியின் சொந்த செயல்பாடுகள் குறித்து எதுவும் பேசவில்லை. நரேந்திர மோடி அரசின் வளர்ச்சிப் பணிகளை எதிர்கொள்ள முடியாததால், காங்கிரஸ் சாதி மற்றும் மதம் சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப முயற்சிக்கிறது.

அதிகாரத்தை இழந்த விரக்தி, தேர்தல் தோல்விகள் மீதான கோபம் மற்றும் மோடி மீதான பயம் ஆகியவைதான் ராகுல் காந்தியின் இந்த 'நகைச்சுவை நிகழ்ச்சி'க்குக் காரணம். மக்கள் இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் இன்னும் தனது தேர்தல் தோல்விகளுக்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது” என்றார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தேசியச் செயலாளர் சச்சின் சாவந்த், “ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்குக் கிடைத்த பலமான வரவேற்பைக் கண்டு பாஜக நிலைகுலைந்து போயுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ராகுலுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு பாஜக தூக்கத்தை தொலைந்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை அன்று நாக்பூரில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஜென் ஸி தலைமுறையிடம் நடத்தும் கலந்துரையாடலில், அவர் மனுஸ்மிருதியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், ஆணாதிக்க அமைப்பு நல்லது என்றும், பெண்கள் என்ன அணிய வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தான் தீர்மானிக்கும் என்றும் கூறுவாரோ?

புனேவில் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலுக்குக் கிடைத்த முன்னெப்போதும் இல்லாத வரவேற்பால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மெட்ரோவை நிறுத்தி, பல கட்டுப்பாடுகளை விதித்து, வன்முறையில் ஈடுபட்ட போதிலும், ஏராளமான இளம் பெண்கள் திரண்டனர்.

இது பாஜகவை உலுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பட்னாவிஸ் ஆகியோர் தூக்கத்தை இழந்துள்ளனர் என்பது தெரிகிறது. ஆனால் இந்த அச்சம் நல்லதுதான்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT