132-வது வார்டில் வெற்றி பெற்ற ரிது தாவ்டே
மும்பை: மும்பை மேயர் பதவிக்கு 132-வது வார்டு உறுப்பினர் ரிது தாவ்டேவை பாஜக அறிவித்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவ சேனா, துணை மேயர் பதவிக்கு சஞ்சய் காடியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
227 வார்டு உறுப்பினர்களைக் கொண்ட மும்பை மாநகராட்சிக்கு கடந்த ஜனவரி 15-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனா 29 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்குத் தேவையான 114 இடங்களைவிட கூடுதலாக 4 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், மேயர் வேட்பாளராக 132-வது வார்டு உறுப்பினர் ரிது தாவ்டேவை பாஜக அறிவித்துள்ளது. பாஜகவின் கூட்டணி கட்சியான சிவ சேனா, சஞ்சய் காடியை துணை மேயர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
மேலும், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த 15 மாதங்களுக்கு மட்டும் துணை மேயராக இருப்பார் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. பலருக்கும் வாய்ப்பு கொடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 4 பேருக்கு துணை மேயர் பதவியை அளிக்க கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் சிவ சேனா தெரிவித்துள்ளது.
1997 முதல் 25 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவ சேனா (யுபிடி), இந்த தேர்தலில் 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான நவநிர்மாண் சேனா 6 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி 24 இடங்களில் வெற்றி பெற்றது. ஏஐஎம்ஐஎம் கட்சி 8 இடங்களிலும், என்சிபி 3 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மும்பைக்கு மேயர் மற்றும் துணை மேயர்கள் கிடைக்க உள்ளனர். இதற்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து 2022 முதல் மாநகராட்சி ஆணையரே, நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
நாட்டின் பணக்கார உள்ளாட்சி அமைப்பாக மும்பை மாநகராட்சி உள்ளது. 2025-26 நதி ஆண்டுக்கான இதன் பட்ஜெட் ரூ.74,450 கோடியாகும். இது சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட் தொகையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.