புதுடெல்லி: கடந்த 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்து கண்கலங்கியதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக எம்.பி சுதான்ஷு திரிவேதி பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘Belonging: A Journey of Love’ நாளை (நவ.10) உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு அவர் நேர்காணல் அளித்து வருகிறார். அந்த வகையில் முன்னணி ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் பாபர் மசூதி குறித்து பேசியிருந்தார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்து கண்கலங்கினேன். இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்க நீண்டதொரு போராட்டத்தை தேசம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அப்போது தான் உணர்ந்ததாக சோனியா காந்தி தனது நேர்காணலில் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் அரசியல் கணக்கீடுகளில் ஏற்பட்ட தவறுகள் பாஜகவின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தன என சோனியா காந்தி கூறியுள்ளார்.
பாஜக விமர்சனம்
இதனை பாஜக எம்.பி சுதான்ஷு திரிவேதி கடுமையாக விமர்சித்துள்ளார். பாபர் மசூதி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி வாக்கு அரசியல் செய்வதாகவும், இந்தியாவில் அந்த சம்பவம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 1992 காலகட்டம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
“காங்கிரஸ் கட்சியின் மனதில் அன்றும், இன்றும் பாபர் இருப்பதை இது காட்டுகிறது. மகாத்மா காந்தியின் ராம ராஜ்ஜிய பார்வையில் இருந்து பாபரின் ராஜ்ஜியத்துக்கு காங்கிரஸ் கட்சி மாறி உள்ளது. அதை இது சுட்டிக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு முகம் உள்ளது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
டிச.6, 1992-ல் அந்தச் சம்பவத்தை எந்த தொலைக்காட்சியில் நீங்கள் (சோனியா காந்தி) பார்த்தீர்கள். அப்போது எங்கு இருந்தீர்கள். சர்வதேச செய்திகளை வெளியிட்டு வரும் ஊடக நிறுவனம்தான் அதனை பதிவு செய்தது. அந்த சம்பவத்துக்கு பிறகுதான் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகின. அதனால் உத்தரப் பிரதேசத்தில் அரசு கலைக்கப்பட்டது. அவர் தொலைக்காட்சியில் பார்த்த நேரத்தை விவரிக்க வேண்டும்” என்று சுதான்ஷு திரிவேதி கூறியுள்ளார்.