பாஜக எம்.பி சம்பித் பத்ரா
புவனேஷ்வர்: எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதை சிவனின் தாண்டவம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதனை பாஜக எம்.பி சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார்.
“தற்போதைய போராட்டத்துக்கு ஒரு வியூகம் வகுக்க வேண்டும் என்று எனது தங்கை (பிரியங்கா காந்தி) அறிவுரை கூறினார். எனது தங்கைக்கு தெளிவான பதிலை அளித்தேன். இது சிவனின் தாண்டவம். இதற்கு வியூகம் தேவையில்லை. இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி செல்கிறோம். நாளை வேறு ஏதாவது ஒரு போராட்டம் நடைபெறும். இடைவிடாமல் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். சிவனின் தாண்டவத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்” என்று அண்மையில் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது கருத்தை பாஜக எம்.பி சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது:
“கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் வீதிகளில் மேற்கொள்ளும் போராட்டத்தை சிவ தாண்டவம் என்று ராகுல் கூறி இருந்தார். இப்படியொரு சூழலில் சிவ தாண்டவத்தை ஒப்பிட்டு பேசுவதை நான் கேட்பது இதுவே முதல் முறையாகும்.
என்னை பொறுத்தவரையில் அது சிவ தாண்டவம் அல்ல. பாகிஸ்தானுக்கும், தேச துரோகிகளுக்கும் இடையிலான ரொமான்ஸ். இதை ஒட்டுமொத்த தேசமும் கண்டு வருகிறது என்று ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன். நிச்சயம் இதற்கான இந்தியா தகுந்த பதில் தரும்” என்றார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.