புது டெல்லி: “டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள அனைத்துக் கடைகளையும் பாரதிய ஜனதா கட்சி வலுக்கட்டாயமாக மூடியுள்ளது. இதனால் உள்ளூர் வணிகர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "நாங்கள் அனைவரிடமும், பேரணி மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்காக இங்கு வரும்போது, பொருட்களை வாங்குங்கள், ஷாப்பிங் செய்யுங்கள் என்று கூறியிருந்தோம்.
ஆனால், கன்னாட் பிளேஸிற்கு வந்தபோது, பாஜக அனைத்து கடைகளையும் வலுக்கட்டாயமாக மூடி வைத்திருப்பதைக் கண்டோம். எனவே, வணிகர்களுக்கு யார் இழப்பை ஏற்படுத்துகிறார்கள், அது எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்த ஆர்ப்பாட்டத்திற்காக புது டெல்லியில் பெருமளவிலான மக்கள் திரண்டதால், நகரின் மையப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
முன்னதாக, இந்தியா முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் இண்டியா கூட்டணியின் "சலோ டெல்லி" பேரணிக்காக ராம்லீலா மைதானத்தில் ஒன்றுகூடினர்.
கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.