இந்தியா

‘பிரதமர் மோடியை ‘பயங்கரவாதி’ என கூறிய கார்கே மீது நடவடிக்கை எடுப்பீர்’ - தேர்தல் ஆணையத்திடம் பாஜக முறையீடு

மோகன் கணபதி

புதுடெல்லி: பிரதமர் மோடியை பயங்கரவாதி என குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக மூத்த தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நேற்று (ஏப்.21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பெரியார், அம்பேத்கர், அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்களுக்கு எதிரானது அதிமுக - பாஜக கூட்டணி.

அண்ணாதுரையின் பெயரை வைத்துக்கொண்டு அதிமுக எப்படி பிரதமர் மோடியுடன் கைகோக்க முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி” என தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவின் மூத்த தலைவர்களான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவசாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

‘கார்கேவின் இந்தக் கருத்து தேசத்துக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானம். இது நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. இப்படி பேசுவதை தேர்தலுக்கு முன்பாக இயல்பாக்கக் கூடாது. அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் கட்சி தனது நடத்தையில் நாள்தோறும் புதிய தரம் தாழ்ந்த நிலையை எட்டி வருகிறது. பொது விவாதங்களின் தரத்தை வீழ்ச்சியடையச் செய்வதில் அது தனது சொந்த சாதனையை தொடர்ந்து முறியடித்து வருகிறது.

இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது ஒழுக்கத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என அழைத்ததன் மூலம், நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார்.

நாட்டின் முதன்மைத் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பு, அவரை நேசித்து ஆதரிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். கடந்த 12 ஆண்டுகளில் தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திய மோடியைப் போன்ற ஒரு தலைவரை பயங்கரவாதி என்று அழைப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் மோடியை அவதூறாகப் பேசுகிறதோ அப்போதெல்லாம் நாட்டு மக்களே அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்கள். இம்முறையும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது இந்தப் பேச்சு குறித்து நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போதே விளக்கம் அளித்த கார்கே, “பிரதமர் மோடி எப்போதும் அச்சுறுத்துகிறார். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை அவரது கைகளில் உள்ளன. தொகுதி மறுவரையறை விவகாரத்திலும்கூட அதை அவர் தனது கைகளில் எடுத்துக்கொள்ள விரும்புகிறார். எனவே அந்த வகையில் இவர் மக்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தலை அளிக்கிறார் என்றே கூறினேன். அவர் ஒரு பயங்கரவாதி என நான் கூறவில்லை” என தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT