இந்தியா

மும்பை மாநகராட்சி மேயராக பாஜகவின் ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு

மோகன் கணபதி

மும்பை: மும்பை மாநகரட்சியின் மேயராக பாஜகவைச் சேர்ந்த ரிது தாவ்டேவும், துணை மேயராக சிவ சேனாவைச் சேர்ந்த சஞ்சய் காடியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள பிரிஹன் மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காடியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

          

1982 முதல் 1983 வரை மும்பை மேயராக பாஜகவைச் சேர்ந்த பிரபாகர் பாய் பதவி வகித்தார். அதன் பிறகு, பாஜகவின் இரண்டாவது மும்பை மேயராக ரிது தாவ்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 6-ம் தேதி ரிது தாவ்டே மும்பை மாநகராட்சி மேயர் வேட்பாளராக பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலும் வெற்றியும்: மும்பை மாநகராட்சித் தேர்தல் (பிஎம்சி) ஜனவரி 15-ம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 227 இடங்களில், ஆளும் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா (ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்றது. மேயரை தேர்ந்தெடுக்க 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி மொத்தம் 118 இடங்களில் வென்றது. இதன்மூலம் மேயர் பதவி இக்கூட்டணிக்கு உறுதியானது.

அதேநேரம் கடந்த 1997 முதல் மும்பை மாநகராட்சி தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சிவசேனா (உத்தவ்), இந்த தேர்தலில் 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. இதுபோல காங்கிரஸ் 24, ஏஐஎம்ஐஎம் 8, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 3, சமாஜ்வாதி 2 இடங்களில் வெற்றி பெற்றன.

மும்பை மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், 132-வது வார்டு உறுப்பினர் ரிது தாவ்டே மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அமித் சதம் அறிவித்தார். இவர் பிஎம்சியின் கல்விக் குழுத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

இதுபோல சிவசேனா கட்சியின் (ஷிண்டே) 5-வது வார்டு உறுப்பினர் சஞ்சய் சங்கர் காதி, துணை மேயர் வேட்பாளராக கடந்த 6ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயர் பதவியை சுழற்சி முறையில் 4 பேருக்கு வழங்க சிவசேனா முடிவு செய்திருப்பதால், இவர் 15 மாதங்களுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2022 வரை சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் மேயராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் 2022-ல் நடைபெற வேண்டிய தேர்தல் சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இதன்மூலம் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனா கட்சியைச் சேராத ஒருவர் மேயராக பொறுப்பேற்றுள்ளார். நாட்டிலேயே பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியாக பிஎம்சி விளங்குகிறது. இதன் 2025-26 பட்ஜெட் தொகை ரூ.74,450 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT