ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: மேற்கு வங்கத்தில் இந்துக்களின் வாக்குகளை பாஜக ஒருங்கே பெற்றது வெற்றிக்கான காரணங்களில் ஒன்று என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் வென்று, ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் - 2, ஏஜெயுபி - 2, மார்க்சிஸ்ட் - 1, ஏஐஎஸ்எஃப் - 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தேர்தல் ஆணையம் அதன் நடுநிலை தன்மையை இழந்துள்ளது. பாஜகவுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் தகுதி வாய்ந்த வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதன் மூலம் அம்மாநிலத்தில் பாஜக வெற்றிக்கு குறிப்பிடத்தக்க வகையிலான முக்கிய பங்காற்றியது தேர்தல் ஆணையம்.
இதோடு இந்துக்களின் வாக்குகளை ஒருங்கே பெற்றதும், சிறுபான்மை வாக்குகளை பிளவுப்பட்டதும் தேர்தலில் பாஜக வெற்றிக்கு முக்கியம் காரணம் என கருதுகிறேன்.
தேர்தல் அரசியலில் இந்தியா கூட்டணியின் பங்கு என்ன என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும். ஏனெனில், எதிர்க்கட்சி கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமானதா அல்லது மாநிலத் தேர்தல்களுக்கும் அது நீட்டிக்கப்பட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.