இந்தியா

நொய்டா விமான நிலையத்துக்கு சொந்தம் கொண்டாடும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பிரதமர் மோடி அண்மையில் சர்வதேச விமான நிலையத்தின் சேவையை தொடங்கி வைத்தார். இப்போது, இந்த விமான நிலையம் வரக் காரணம் யார் என்பதில் பாஜக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்த விமான நிலையத்தை திறப்பதில் தனது பாஜக அரசு எடுத்த பல நடவடிக்கைகள் பற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடக்க விழாவிலேயே பேசியிருந்தார். இந்நிலையில், இப்போது அதற்கானப் பெருமையை பறித்துக் கொள்வதில், உ.பி. அரசியலில் கடுமையான போட்டாபோட்டி தொடங்கியுள்ளது.

          

போட்டியில் பாஜகவுடன் முன்னாள் முதல்வர்களான சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து முதலாவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறுகையில், “இந்த விமான நிலைய திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதில் சமாஜ்வாதி கட்சி முக்கியப் பங்காற்றியது. எங்கள் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளித்து ஒப்புதல் பெற்றதால்தான் இத்திட்டம் இன்று நிஜமாகி விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், “இந்தத் திட்டம் எனது அரசாங்கத்தின் பங்களிப்பு என்பதால் அதற்கான பெருமை எங்களையே சாரும். ஏனெனில், இந்த விமான நிலையத்துக்கான வரைபடமும் (blueprint), அதற்கான அடிப்படைப் பணிகளும் எனது ஆட்சியின் காலத்திலேயே தொடங்கப்பட்டது.

விமான நிலையம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வரைபடமும், தேவையான அடிப்படைப் பணிகளும் எனது அரசே செய்திருந்து.”எனத் தெரிவித்தார்.

மற்றொரு பதிவில், மாயாவதி காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கூறுகையில், “மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், இத்திட்டம் இன்னும் வெகு முன்னதாகவே நிறைவு பெற்றிருக்கும். யமுனா விரைவுச்சாலைத் திட்டத்தைப் போலவே, இந்த வளர்ச்சித் திட்டமும் எனது ஆட்சிக்காலத்திலேயே வெகு முன்னதாகவே நிறைவு பெற்றிருக்கும்,” என்றார்.

SCROLL FOR NEXT