கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு செய்ய பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேலும், மத்தியப் படைகளும், தேர்தல் பார்வையாளர்களும் பாஜகவின் ஏவல்படி செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தான் போட்டியிடும் பபானிபூர் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்ற மம்தா பானர்ஜி, இந்த தேர்தலில் அதிகாரிகளால் ஜனநாயக நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தனது கட்சித் தொண்டர் ஒருவரின் புகைப்படத்தை காண்பித்தார். அப்போது, " இரவில் எங்கள் தொண்டர் எப்படித் தாக்கப்பட்டிருக்கிறார் என்று. இந்த அட்டூழியத்தைப் பாருங்கள். என்ன மாதிரியான அட்டூழியம் இங்கு நடைபெறுகிறது? வாக்குப்பதிவு இப்படி நடைபெறக்கூடாது, வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற வேண்டும்
இது ஒரு ஜனநாயகத் திருவிழா. ஆனால் அவர்கள் இதை முழுமையாகச் சீரழித்துவிட்டார்கள். தேர்தலில் வன்முறையின் மூலம் முறைகேடு செய்யவே பாஜக விரும்புகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. எங்கள் தொண்டர்களும் மக்களும் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் இந்த இடத்தை விட்டு விலக மாட்டார்கள்.
வெளியிலிருந்து வந்துள்ள பார்வையாளர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடுகின்றனர். மத்தியப் படைகளும், தேர்தல் பார்வையாளர்களும் பாஜகவின் ஏவல்படியே செயல்படுகின்றனர். வெளியிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். பாஜக என்ன சொல்கிறதோ, அதையே அவர்கள் செய்கிறார்கள். வாக்குகள் வாக்காளர்களால் அளிக்கப்படும், காவல்துறை அல்லது பாதுகாப்புப் படைகளால் அல்ல.
சுற்றிப் பாருங்கள், எங்கள் சுவரொட்டிகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. இப்படித்தான் தேர்தல்கள் நடைபெறுமா? சமீபத்தில் சில புதிய நபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர், அவர்கள் தங்கள் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்” என்றார்.
எனினும், பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தை உணர்ந்து, குழப்பத்தை ஏற்படுத்த மம்தா பானர்ஜி முயல்வதாக பாஜக குற்றம் சாட்டியது.
பபானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி என்பது மம்தா பானர்ஜியின் அரசியல் கோட்டையாகும். இங்கு அவருக்கு எதிராக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.