கொல்கத்தா: மேற்கு வங்க இரண்டாம் கட்ட தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், பவானிபூர், நந்திகிராம் தொகுதிகளின் பாஜக வேட்பாளருமான சுவேந்து அதிகாரி நேற்று கூறுகையில், “டைமண்ட் ஹார்பர் தொகுதியின் கீழ் வரும் ஃபால்டா பகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) எங்கள் கட்சி சின்னம் ‘டேப்’ ஒட்டி மறைக்கப்பட்டு இருந்தது.
அப்போது 35% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த முறைகேடு குறித்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பூபேந்திர யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேசினேன். தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது” என்றார்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா கூறுகையில், ‘‘பல வாக்குச்சாவடிகளில் டேப் பயன்படுத்தப்பட்டதன் மூலம் வாக்காளர்கள் பாஜக சின்னத்தைத் தேர்வு செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர். இந்த முறைகேட்டை ‘டைமண்ட் ஹார்பர் மாதிரி’ என்று அழைக்கலாம். முறைகேடுகள் நடந்த இடங்களில் உடனடியாக மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்” என்றார்.
ஹரிந்தங்கா உயர்நிலைப் பள்ளியின் ஒரு வாக்குச்சாவடி உட்பட குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளை மாளவியா சுட்டிக்காட்டினார். மேலும், 189-வது வாக்குச்சாவடி போன்று வேறு பல வாக்குச்சாவடிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுகையில், “இவிஎம்.களில் செய்யப்படும் முறைகேடு அல்லது சேதாரம் குறித்த புகார்கள் முழுமையாக சரிபார்க்கப்படும். வாக்குப்பதிவு பொத்தான் மீது டேப் ஒட்டப்பட்டு இருந்ததாகப் புகார்கள் வந்தால், அவை சரிபார்க்கப்படும். புகார் உண்மையாக இருந்தால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்” என்றார்.