புதுடெல்லி: மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் பெறுபவர்கள் அதை தொடர்ந்து பெறுவதற்கு அக்டோபர் 1ம் தேதிக்குள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோர், மானியத்துடன் சில்லறை விற்பனை விலையில் எல்பிஜி சிலிண்டரைப் பெறுவதற்கு அக்டோபர் 1, 2026 முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு (BAA) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மானிய விலையில் வழங்கப்படும் எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர், உண்மையான மற்றும் தகுதியான குடும்பங்களைச் சென்றடைவதை உறுதி செய்வதையும், வணிக மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்குத் திசைதிருப்பப்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19 நிலவரப்படி, வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோரில் 27.43 கோடி பேர், அதாவது மொத்தத்தில் 89.9 சதவீதம் பேர், ஏற்கனவே பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடித்துள்ளனர். இந்த நுகர்வோர் எதையும் செய்யத் தேவையில்லை. அவர்கள் எல்பிஜி சிலிண்டர் பெறுவதற்கான முன்பதிவுகள் முன்பைப் போலவே தொடரும்.
இந்தச் சரிபார்ப்பு செயல்முறை முடிந்தவுடன், இதுவரை அதை முடிக்காத நுகர்வோரும் மானிய விலையில் நிரப்புவதற்கு முன்பதிவு செய்ய முடியும். LPG விநியோகத்தின் போது, விநியோகஸ்தரின் ஷோரூமில் அல்லது அந்தந்த எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மூலம் BAA-வை பூர்த்தி செய்யலாம்.
இண்டேன் வாடிக்கையாளர்கள் இந்தியன்ஆயில் ஒன் (IndianOil ONE) செயலியையும், பாரத்கேஸ் நுகர்வோர் ஹலோபிபிசிஎல் (HelloBPCL) செயலியையும், ஹெச்பி கேஸ் (HP Gas) வாடிக்கையாளர்கள் ஹெச்பி பே (HP PAY) செயலியையும் பயன்படுத்தலாம். நுகர்வோர் இந்த செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே இந்த செயல்முறையைத் தாங்களாகவே பூர்த்தி செய்ய முடியும்.
BAA-வை பூர்த்தி செய்ய விரும்பாத அல்லது இயலாத நுகர்வோர் தொடர்ந்து LPG-யைப் பெறலாம். இருப்பினும், அவர்கள் நுகர்வோர் வலைதளம், மொபைல் செயலி, வாட்ஸ்அப் சாட்பாட் அல்லது IVRS உள்ளிட்ட டிஜிட்டல் வழிகள் மூலம் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். அத்தகைய நுகர்வோர், உள்ளூரில் கிடைக்கும் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்களில் மானியம் இல்லாமல் சந்தை விலையில் LPG-யைப் பெற முடியும்.
முதலில், ஜூன் 30, 2026-க்குள் BAA-வை பூர்த்தி செய்யுமாறு நுகர்வோர் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர், இந்த காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது, செப்டம்பர் 14 சமீபத்திய காலக்கெடுவாக இருந்தது.
வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி, அதன் அடக்கவிலையை விடக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. ஜூன் 2026-ல் ஒரு சிலிண்டருக்கு ரூ.721-ஆக இருந்த மானியம் செப்டம்பர் 2026-ல் சுமார் ரூ. 210-ஆக இருந்தது.
வீட்டு உபயோக எல்பிஜி-யின் விலையை நுகர்வோருக்கு ஏற்ற வகையில் பராமரிக்க அரசு, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு 2022-23-ல் ரூ.22,000 கோடி இழப்பீட்டை வழங்கியது. 2025-26 மற்றும் 2026-27 ஆகிய ஆண்டுகளில் ரூ. 30,000 கோடியை வழங்கி வருகிறது.
இதுவரை 'BAA' நடைமுறையை முடிக்காத நுகர்வோர், அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்னதாகவே அதனை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எல்பிஜி சேவைகள் தொடர்பான உதவிகளுக்கு, 1800 2333 555 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை நுகர்வோர் தொடர்பு கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.