இந்தியா

முதல்வர்களை நீக்கும் மசோதா: அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் கடுமையான வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 15 பாஜக எம்பிக்கள். எதிர்க்கட்சிகளை சேர்ந்த 4 எம்பிக்கள் உட்பட 31 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டுக் குழுவின் காலஅவகாசம் விரைவில் நிறைவடைய உள்ளது.

குழுவின் அவகாசத்தை நீட்டிக்கக் கோரி அபராஜிதா சாரங்கி சார்பில் மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் நேற்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி கூட்டுக் குழு தனது அறிக்கையை அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி வாரத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் கூட்டுக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT