பாட்னா: பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஷிதாலா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோ எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுவரை உயிரிழந்தோரில் 6 பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த அனைவருமே பெண்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.6 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. அதேபோல், பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பிரதமரின் நிவாரணத் தொகையிலிருந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
நடந்தது என்ன?
நாளந்தா மாவட்டத்தின் மாக்தா என்ற கிராமத்தில் உள்ள ஷிதாலா மாதா கோயிலில் செவ்வாய்க் கிழமைதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதிலும், இன்று சைத்ர மாதத்தின் கடைசி செவ்வாய்க் கிழமை என்பதாலும், மஹாவீர் ஜெயந்தி என்பதாலும் அதிகளவில் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர், விரைவாக சாமியை தரிசிக்க முயன்றதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், 9 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் பலரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒரு பக்தை, ‘‘இங்கு செவ்வாய்க் கிழமைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மக்கள் ஷிதாலா மாதாவின் தரிசனத்துக்காக வருகிறார்கள். நாங்களும் பாட்னாவில் இருந்து வந்துள்ளோம். ஆனால், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக சிலர் உயிரிழந்தனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த அசம்பாவிதத்துக்குக் காரணம். இங்கு ஒரு போலீசார் கூட இல்லை’’ என கூறினார்.
மற்றொரு பக்தை ரீனா ராய் கூறுகையில், ‘‘சிலர் மயங்கி விழுந்ததாகவும், சிலர் காயமடைந்ததாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. சிலர் உயிரிழந்துவிட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். வரிசையில் நிற்க விரும்பாததாலும் மற்றவர்களுக்கு முன்பாக முதலில் தரிசனம் செய்துவிட வேண்டும் என முயன்றவர்களால்தான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று சைத்ர மாதத்தின் கடைசி செவ்வாய்க் கிழமை. நிர்வாக சீர்கேடே இந்த சம்பவத்துக்குக் காரணம்’’ என தெரிவித்துள்ளார்.