வைஷாலி: "அன்று பிஹார் என்றாலே ஊழல்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், முதலீடுகளுக்காகவும் வளர்ச்சிக்காவும் பிஹார் இன்று அறியப்படுகிறது” என்று பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார்.
பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் 34,000 கோடி ரூபாய் மதிப்பிலான 227 திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அவற்றுக்கு அடிக்கல் நாட்டியும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “முன்பெல்லாம் ஊழல்களுக்காக அறியப்பட்ட பிஹார் இன்று முதலீடுகளுக்காகவும் வளர்ச்சிக்காவும் பெயர் பெற்றுள்ளது. இப்போது பிஹாரில் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் பிஹாரில் குற்றச் சம்பவங்கள் குறித்த செய்திகளே தலைப்புச் செய்திகளாக இருந்தன. தற்போது குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பிஹாரில் தற்போதைய என்டிஏ கூட்டணி அரசு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசு நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மீட்டெடுத்த பெருமை முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரையே சாரும். நிதிஷ் குமாரின் ஆசியுடன் முதல்வர் சம்ராட் சவுத்ரி அந்தப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார்.
காங்கிரஸ் கட்சி 'கரிபி ஹடாவோ' (வறுமையை ஒழிப்போம்) என்று சொல்லி பல பத்தாண்டுகளாக ஏழை வாக்காளர்களை ஏமாற்றி வந்தது. எனது தலைமையிலான பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை போன்ற திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது அரசின் மன உறுதி மற்றும் ஏழைகளுக்கான நலத்திட்டங்களின் விளைவாகும்” என்றார்.
முன்னதாக, கங்கை நதியில் ரூ.4,280 கோடியில் கட்டப்பட்ட நிதிஷ் பாலத்தையும் அவர் திறந்துவைத்தார். “முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் பிஹாரில் நல்லாட்சிக்கு வித்திட்டார். அவரது முயற்சியால் கங்கை நதியில் புதிய ஆற்றுப் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்கள், விவசாயிகள் பெரிதும் பயன் அடைவார்கள். நிதிஷ் குமாரின் மக்கள் நலச் சேவையை அங்கீகரிக்கும் வகையில் புதிய பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.