பிஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார்
பாட்னா: பிஹார் முதல்வராக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவரது அமைச்சரவையில் இரண்டு துணை முதல்வர்கள் உள்பட 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
நிதிஷ் குமார் அமைச்சரவையில் கடந்த முறை துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இம்முறையும் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த மங்கல் பாண்டே, திலிப் ஜெய்ஸ்வால், நிதின் நபின், ராம் கிரிபால் யாதவ், சஞ்சய் சிங் டைகர், அருண் சங்கர் பிரசாத், சுரேந்திர மேத்தா, நாராயண் பிரசாத், ரமா நிஷாத், லகேந்திர குமார் ரோஷன், ஸ்ரேயாசி சிங், பிரமோத் குமார் ஆகிய 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன்மூலம், நிதிஷ் குமார் அமைச்சரவையில் அதிகபட்சமாக பாஜகவின் 14 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், அஷோக் சவுத்ரி, லேசி சிங், மதன் சாஹ்னி, சுனில் குமார், முகம்மது ஜமா கான் ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சியின் சஞ்சய் குமார் சிங், சஞ்சய் குமார் ஆகிய இருவரும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சுமன் என்பவரும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சாவின் தீபக் பிரகாஷும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதன்மூலம், பாஜக 14, ஐக்கிய ஜனதா தளம் 8, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 2, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா - 1, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 1 என மொத்தம் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளதை அடுத்து, வரும் 26-ம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பார்கள்.