இந்தியா

‘பிஹார் வெள்ளத்தில் 49.67 லட்சம் மக்கள் பாதிப்பு’ - மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த காங். வலியுறுத்தல்

மோகன் கணபதி

புதுடெல்லி: பிஹாரில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையையும் துயரத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு முழு வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேபாளத்தில் உற்பத்தியாகி பிஹாருக்குள் பாயும் ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், பிஹாரிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பிஹாரில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பாட்னா, போஜ்பூர், சரண், வைஷாலி, பகல்பூர், பெகுசராய், சமஸ்திபூர், பக்சர், முங்கர், கதிஹார், லக்கசராய், ககரியா, பூர்னியா, மாதேபுரா, அராரியா ஆகிய 15 மாவட்டங்களில் 49.67 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிஹாரில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது.

இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எனது அனுதாபங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வருமாறு காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதேவேளையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு முழு வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றும், அத்தியாவசிய உதவிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிஹாரில் வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

15 மாவட்டங்களில் சுமார் 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கான கிராமங்களில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமும் உதவியும் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

நிவாரணம், மீட்பு, மருத்துவ உதவி மற்றும் மறுவாழ்வு முயற்சிகளில் அரசும் நிர்வாகமும் தீவிரமாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் தாமதமின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் பிஹாருக்கு ஆதரவாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT