இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக நிதிஷ் குமார் பதவியேற்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிஹாரில் மிக நீண்ட காலம் (சுமார் 20 ஆண்டுகள்) முதல்வராக பதவி வகித்தவர் எனற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தளம் தலைவரான அவர், மத்திய அரசியலுக்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து கடந்த மார்ச் 16-ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 30-ம் தேதி சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை ராஜினாமா செய்தார்.

          

முதல்வர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யாத நிதிஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக நேற்று பாட்னாவில் இருந்து புதுடெல்லி வந்தார். இன்று, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தனது அறையில் நடைபெற்ற ஒரு எளிய விழாவில், நிதிஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தி மொழியில் நிதிஷ் குமார் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

மாநிலங்களவை முன்னவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், பாஜக எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பற்றதன் மூலம் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. வரும் 14-ம் தேதி பிஹாருக்கான புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT