புதுடெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த வழக்கில், பிஹார் மாநில பாஜக எம்எல்ஏ ராஜு குமார் சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நடந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வானில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் தவறுதலாக அர்ச்சனா குப்தா என்ற பெண் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொண்டாட்டத்தின் போது பிஹாரின் சாஹேப்கஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏவான ராஜு குமார் சிங் (56) தான் துப்பாக்கியால் சுட்டார் என்பது சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304, பகுதி 2 (கொலைக் குற்றமாகாத மரணம் விளைவித்தல்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் ராஜு குமார் சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தமக்கு மரணம் விளைவிக்கும் நோக்கம் இல்லை என எம்எல்ஏ தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், “கொண்டாட்டங்களின் போது நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகள் நம் நாட்டில் பல உயிர்களைப் பறிக்கும் சாபக் கேடாக மாறியுள்ளன” என நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.