புதுடெல்லி: திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தினத்தன்று ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு பின்பற்றாதது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான மிகப்பெரிய அவமதிப்பு என்று பாஜக கண்டித்துள்ளது.
டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுதான்ஷு திரிவேதி, “திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் நேற்று ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தமிழக அரசு இந்த உத்தரவைப் பின்பற்றவும் இல்லை, செயல்படுத்தவும் இல்லை.
இந்தியா கூட்டணியிடமும் ராகுல் காந்தியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் அரசியலமைப்புச் சட்டத்தை தங்கள் பையில் வைத்திருப்பதாகக் காட்டிக்கொள்கிறீர்கள். ஆனால், அந்த அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்கத் தயாராக இல்லையா? அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இவர்களால், அரசியலமைப்புச் சட்டத்துக்கு இழைக்கப்பட்ட மிக மோசமான, இழிவான அவமதிப்பு இதுவே.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற தீய நோக்கம்தான் இந்த அவமதிப்புக்குக் காரணம். இந்து மதத்தை ஒழிப்பதற்கான சர்வதேச சதி திட்டத்தின் ஒரு பகுதி இது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது இண்டியா கூட்டணியின் தீய நோக்கமாகும். இது காங்கிரஸ் கூட்டணியின் மற்றொரு ஷா பானு நிகழ்வாக அமையும். தமிழக அரசின் இந்த செயலால் இந்துக்களின் மத உணர்வுகள் பண்படுத்தப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.