மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் முதல்வர் மோகன் யாதவ்

 
இந்தியா

“எப்ஐஆர் முதல் உச்ச நீதிமன்றம் வரை 3 ஆண்டுகளில் வழக்குகளுக்கு தீர்வு” - அமித் ஷா

மோகன் கணபதி

போபால்: பாரதிய நியாய சன்ஹிதா முழுமையாக அமல்படுத்தப்பட்டதும், முதல் தகவல் அறிக்கை நிலை முதல் உச்ச நீதிமன்றம் வரையில் வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில், பாரதிய நியாய சன்ஹிதா குறித்த கண்காட்சி மற்றும் மாநில அளவிலான கால்நடை வளர்ப்போர் மாநாடு ஆகியவை நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்த உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, கால்நடை வளர்ப்போர் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், “ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் அவர்களின் அரசாங்கத்தையும் ஆட்சியையும் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டவை. இந்திய குடிமக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவே புதிய குற்றவியல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படைத் தத்துவம் நீதி வழங்குவதே தவிர, தண்டனை அளிப்பது அல்ல. குற்றம் செய்பவர்களைத் தடுக்க அவசியமான இடங்களில் மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது.

புதிய குற்றவியல் சட்டம் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக அமல்படுத்தப்படும். அதன்பிறகு, முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்வது முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்குள் தீர்த்து வைக்கப்படும்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே விவசாயிகளும், கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடையவர்களும் தனி கூட்டுறவு அமைச்சகம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். எனினும், காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக இதை அனுமதிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகே கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கினார்.

கூட்டுறவு அமைச்சகத்தால் அதிகம் பலனடைந்து வருபவர்கள் கால்நடை வளர்ப்பவர்களே. 2014-15ல் இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி 14.7 கோடி டன்னாக இருந்தது. 75 ஆண்டுகளில் அது 14.7 கோடி டன்னை மட்டுமே எட்டி இருந்தது. ஆனால், மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அது 25 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

மாட்டு இனங்களை மேம்படுத்தவும், அவை நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யவும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2047ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் ஒவ்வொரு துறையிலும் இந்தியா உலகிலேயே முதலிடத்தைப் பிடிக்கும் என்று மோடி உறுதிமொழி எடுத்துள்ளார். நாட்டு மக்களையும் அவ்வாறே உறுதிமொழி ஏற்கச் செய்துள்ளார்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT