புதுடெல்லி: சிபிஎஸ்இ விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்தவதற்கு கட்டணங்கள் என்ற பெயரில் பணம் கொள்ளையடிக்கப் படுவதாகவும், சிபிஎஸ்இ-க்குள் இருக்கும் பிக்பாக்கெட் திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓஎஸ்எம் முறை (On-Screen Marking - OSM) காரணமாக மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் பலர் குற்றம் சாட்டி இருந்தனர். வேதாந்த் என்ற ஒரு மாணவர் மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள் கோரி இருந்த நிலையில் அவருக்கு வேறொருவரின் விடைத்தாள் கொடுக்கப்பட்டது குறித்து சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவரது சமூக ஊடக கணக்கு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், வேதாந்த் உள்ளிட்ட சிபிஎஸ்இ12ம் வகுப்பு தேர்வெழுதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அவர் தனது உரையில், “ஓஎஸ்எம் முறை தொடர்பாக மாணவர்கள் பலர் புகார்களை தெரிவித்துள்ளனர். கல்வித்துறை என்பது ஒரு வணிகமாகவே பார்க்கப்படுகிறது. அதில் ஏற்படும் நிர்வாகத் தவறுகளுக்கான விலையை மாணவர்களே சுமக்க நேரிடுகிறது.
விடைத்தாள் நகல்களைப் பெறுவதற்கும், மதிப்பெண்களை மறு கூட்டல் செய்வதற்கும், மறு மதிப்பீடு செய்வதற்கும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் பிக்பாக்கெட் திருடர்கள் சிபிஎஸ்இ-க்குள் இருப்பதையும் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையுமே காட்டுகிறது.
கணினிமயமாக்கப்பட்ட விடைத்தாள் நகல்களைப் பெற ஒரு பாடத்துக்கு ரூ.100 கட்டணம், மறுகூட்டல் கோருவதாக இருந்தால் ஒரு விடைத்தாளுக்கு ரூ.100 கட்டணம், மறுமதிப்பீடு கோருவதாக இருந்தால் ஒரு கேள்விக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு மாணவர் தனது சொந்த விடைத்தாளை துல்லியமாக மதிப்பிட ரூ.2,000 வரை செலுத்த வேண்டி இருக்கலாம். இதற்காக 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ எவ்வளவு வருவாயை ஈட்டுகிறது என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
கைபேசிகளைப் பயன்படுத்தி விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும்போது, மதிப்பிடுவதில் பிழைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அந்த பிழைகளைச் சரி செய்வதற்கான செலவை மாணவர்கள ஏற்க வேண்டி இருக்கிறது. சிபிஎஸ்இ-யின் தவறுகளுக்கான தண்டனை மணவர்கள் மீது விழுகிறது. அதனால் கிடைக்கும் லாபம் அரசாங்கத்துக்குச் செல்கிறது.
கல்வி என்பது ஒரு சேவையாகப் பார்க்கப்படாமல், ஒரு வணிகமாகப் பார்க்கப்படும்போது பிழைகள் சரி செய்யப்படுவதில்லை. மாறாக, அவை பன்மடங்கு பெருகுகின்றன. இதற்கான மிகக் கடுமையான விலையை நம் குழந்தைகளே செலுத்தி வருகிறார்கள். அதோடு, தங்கள் நேரம், தங்கள் தன்னம்பிக்கை, தங்கள் எதிர்காலம் ஆகியவற்றையும் அவர்கள் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
நீட் தேர்வு மட்டுமல்ல, சிபிஎஸ்இ தேர்வும் நிதிமயமாக்கப்பட்டுவிட்டது. அதீத அதிகார குவிப்பு ஒரு சிக்கலாகி, அது அமைப்பின் ஒரு பெரும் தோல்வியாகிவிடுகிறது. மாறாக, பரவலாக்கப்பட்ட அமைப்பு இருந்தால் ஒரு பக்கம் செயலிழந்தாலும் மற்றொரு பக்கத்தின் மூலம் உங்களால் அதைச் சமாளிக்க முடியும். எனவே, இந்திய கல்வி முறை இப்போது ஒரு கட்டமைப்புச் சிக்கலில் உள்ளது. மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க வேண்டும். காங்கிரஸ் அதை உறுதி செய்யும்” என தெரிவித்தார்.