இந்தியா

மத்திய அரசின் உத்தரவால் ‘லோக் பவன்’ ஆக மாறியது மேற்கு வங்க ராஜ் பவன்!

மோகன் கணபதி

கொல்கத்தா: மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவனை லோக் பவன் என பெயர் மாற்றினார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கடந்த 2023, மார்ச் 27 அன்று அப்போதைய ராஜ் பவனின் அடையாளச் சாவியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ஒப்படைத்தார். இந்த வரலாற்றுத் தருணம், மக்களின் ராஜ்பவனில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது.

மக்களின் ராஜ் பவனுக்குப் பின்னால் இருந்த யோசனை, மக்களை ராஜ் பவனுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது. மக்களின் நம்பிக்கைகள், கனவுகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் ராஜ் பவனை உயிர்ப்புள்ள கட்டிடமாக மாற்றுவதே இதன் நோக்கம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கட்டிடம், அச்சத்தின் அடையாளமாக அல்லாமல் அனைவருக்கும் திறந்து இருப்பதாகவும், மனிதாபிமானம் மிக்கதாகவும் மாற்றுவதே இதன் முக்கிய நோக்கம். கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் ராஜ் பவன் மக்களுக்காக பல ஆக்கப்பூர்வமான, மக்கள் நலன் சார்ந்த செயல்களை மேற்கொண்டுள்ளது.

மாநிலத்தின் எந்தப் பகுதியில் வன்முறை, இயற்கைப் பேரழிவு போன்றவை ஏற்பட்டாலும் மக்கள் ராஜ் பவன், மக்களின் வீட்டு வாசலுக்குச் சென்று உதவிக்கரம் நீட்டியுள்ளது.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டு மக்கள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இணங்க, நாட்டில் உள்ள அனைத்து ராஜ் பவனும் லோக் பவன் என பெயர் மாற்ற வேண்டும் என்றும், அனைத்து ராஜ் நிவாசும் லோக் நிவாஸ் என பெயர் மாற்ற வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் 2025, நவ. 25 அன்று அறிவித்தது. அந்த அறிவிப்புக்கு இணங்க மேற்கு வங்கத்தில் உள்ள ராஜ் பவன் லோக் பவனாக மாற்றப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை அடுத்து, ஆளுநர் மாளிகையின் லெட்டர் ஹெட்கள், பெயர்ப் பலகைகள், சமூக ஊடக கணக்குகள் ஆகியவற்றிலும் லோக் பவன் என பெயர் மாற்றப்படும் என மேற்கு வங்க லோக் பவன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT