பிரதமர் மோடி

 
இந்தியா

"நவீன ஆராய்ச்சியின் பலன்களை இந்தியா உலகத்துடன் பகிர வேண்டும்" - பிரதமர் மோடி

வெற்றி மயிலோன்

பெங்களூரு: “இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சியின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், உலகம் முழுவதும் இந்தியாவின் கலாச்சார செல்வாக்கு விரிவடைந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெங்களூருவில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற 'பிரசாந்தி குடீரம்' பொன்விழா கொண்டாட்டங்கள் மற்றும் எழுத்தாளர் எச். வி. சேஷாத்ரியின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சியின் பலன்களை மனிதகுலத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இளைஞர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் ஆயுர்வேதம் தொடர்பான ஆராய்ச்சிகளையும், ஆயுர்வேதம் அடிப்படையிலான காப்புரிமைகளையும் ஊக்குவித்துள்ளோம். இன்று அதன் பலன்களை நாம் காண்கிறோம். இதன் காரணமாக இந்தியாவிலிருந்து ஆயுஷ் மற்றும் மூலிகை தயாரிப்புகள் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவும் வகையில், அரசு 'இ-ஆயுஷ் விசா'வை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் 'பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக மையம்' (Global Traditional Medicine Centre) நிறுவப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத் துறையில் ஆராய்ச்சிகளும் சர்வதேச ஒத்துழைப்பும் ஊக்குவிக்கப்படுகின்றன.

கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா தனது கலாச்சாரம், அடையாளம், அறிவு மற்றும் அறிவியலை உலகிற்கு மிகுந்த தன்னம்பிக்கையுடன் எடுத்துரைத்துள்ளது. இதனால்தான், இந்தியாவின் முன்னெடுப்பால் இன்று உலகம் முழுவதும் 'சர்வதேச யோகா தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானவை. யோகா துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பல்வேறு போட்டி நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை இவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT