புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்துவது, அவர் தாயகம் திரும்புவதைத் தாமதப்படுத்தும் உத்தி என்று கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்து தற்போது இங்கு வசித்து வருகிறார். இந்நிலையில், ஷேக் ஹசீனா வரும் டிசம்பரில் வங்கதேசம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், நாடு திரும்புவதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஷேக் ஹசீனாவுக்காக வாதாடி வரும் லண்டனைச் சேர்ந்த மேட்ரிக்ஸ் சேம்பர்ஸ் சட்ட நிறுவனம், புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கக் கோரி கடந்த 9-ம் தேதி டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியது. ஆனால், அந்தக் கோரிக்கையை அனுப்புவதற்கு ஷேக் ஹசீனாவின் ஒப்புதல் பெறப்படவில்லை என்று வங்கதேச அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஷேக் ஹசீனா சார்பில் செயல்படுவதற்கான அவரது கையொப்பமிட்ட ஒப்புதல் கடிதத்துடன், மேட்ரிக்ஸ் சேம்பர்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் 2-வது கடிதத்தை தூதரகத்துக்கு அனுப்பியுள்ளது.
ஷேக் ஹசீனா தாயகம் திரும்புவதற்குத் தேவையான பாஸ்போர்ட்டை வழங்க மறுப்பதுடன், அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் வங்கதேசம் வலியுறுத்துவது, அவர் நாடு திரும்புவதைத் தாமதப்படுத்தும் செயல் என்று இந்தியத் தரப்பைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய சூழலில் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்புவதை அந்நாட்டு அரசு விரும்பவில்லை என்றே இதிலிருந்து ஊகிக்க முடிகிறது. அவரை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்துகிறது. ஆனால், நாடு கடத்துவது சிக்கலான சட்ட நடைமுறைகளைக்கொண்டது.
ஒருவர் தாமாக முன்வந்து நாடு திரும்ப விரும்பவில்லை என்றால், அவரை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதற்கான வழிமுறையே நாடு கடத்தல்். ஆனால், ஷேக் ஹசீனா தாமாகவே வங்கதேசம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒருவர் தாமாக முன்வந்து நாடு திரும்ப முடிவு செய்துவிட்டால், அவரை நாடு கடத்த வேண்டிய அவசியம் இல்லை. அவரது முடிவிற்கு இந்தியா எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை. பயண ஆவணம் இல்லாததே அவரது பயணத்துக்குத் தடையாக உள்ளது. ஷேக் ஹசீனா வங்கதேசக் குடிமகள் என்பதால், அவருக்குப் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரம் வங்கதேச அரசுக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.