ஹைதராபாத்: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்துக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மே 8-ஆம் தேதி ஹைதராபாத்தின் பேட் பஷீராபாத் காவல் நிலையத்தில் சாய் பகீரத் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருமண ஆசை காட்டி மொய்னாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்துச் சிறுமிக்குக் கட்டாய மது கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பண்டி சாய் பகீரத் கைது செய்யப்பட்டார். சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கில் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 74, 75 ஆகியவற்றின் கீழும், போக்சோ சட்டத்தின் பிரிவு 11, 12 ஆகியவற்றின் கீழும் பண்டி சாய் பகீரத் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில், ‘எனது மகள் 10-ம் வகுப்பு படித்து வரும் மைனர். அவரை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து பண்டி சாய் பகீரத், கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் உறவை ஏற்படுத்திக்கொண்டார். அக்டோபர் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலத்தில் அவரை தகாத உடல்ரீதியிலான செயல்களுக்கு உட்படுத்தினார். மது அருந்துமாறும் அவர் வற்புறுத்தியுள்ளார்.
ஜனவரி 2026-ல் அந்த உறவு முடிவுக்கு வந்த பிறகு எனது மகள் அதே மாதத்தில் இருமுறை தற்கொலைக்கு முயன்றாள். எனவே, பண்டி சாய் பகீரத் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்’ என்று கோரி இருந்தார்.
இதனிடையே, சிறுமியின் குடும்பத்தினருக்கு எதிராக கரீம்நகர் டவுன் காவல் நிலையத்தில் பண்டி சாய் பகீரத் புகார் அளித்திருந்தார். அதில், பணம் கொடுக்காவிட்டால் தங்கள் மகள் தற்கொலை செய்துகொள்வாள் என்று மிரட்டி அப்பெண்ணின் பெற்றோர் தன்னிடம் ரூ.5 கோடி பறிக்க முயன்றனர் என குற்றம் சாட்டி இருந்தனர்.
தனது மகன் கைது குறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், "சட்டத்தின் முன் அனைவரும் சமம். என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறான், இருப்பினும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க அவனை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தனது இறுதித் தேர்வில் பங்கேற்க பண்டி சாய் பகீரத் ஜாமின் கோரி இருந்தார். இதையடுத்து, 7 நாட்களுக்கு ஹைதராபாத் சிறப்பு போக்சோ நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
ரூ.1 லட்சம் பிணைத் தொகை, இரண்டு தனி நபர்கள் உத்தரவாதம் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.