புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாராணசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யு) அவ்வையாரின் கொன்றை வேந்தன் நூல் தொடர்பான தேசியப் பயிற்சிப் பட்டறை கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் பட்டறையை மத்திய அரசின் இந்திய மொழிகள் துறை மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்தின. இந்தியாவின் மத்தியப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழ் இலக்கிய நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்கும் பணியைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) விரிவாகச் செய்து வருகிறது.
அதன்படி, முதல் கட்டமாக சிஐசிடி நிதியுதவியுடன் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து அவ்வையாரின் புகழ்பெற்ற ஆத்திசூடி நூலை 60-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயலக மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், சிஐசிடி உதவியுடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’ நூலை 60-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.
12 அயலக மொழி: இதையடுத்து, பிஎச்யு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வையாரின் கொன்றை வேந்தன் நூலை இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசமைப்புச் சட்டம் 8-ம் அட்டவணையில் உள்ள பெரும்பாலான மொழிகளிலும், பல வடகிழக்கு மாநிலங்களின் மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்படுகிறது. தவிர சீனம், ஜப்பானியம், பிரெஞ்சு, ஜெர்மன், கொரியன், சிங்களம் முதலிய 12 அயலக மொழிகளிலும் கொன்றை வேந்தன் மொழிபெயர்க்கப்படுகிறது.
இதற்கான பட்டறையை தொடங்கி வைத்த பிஎச்யு துணை வேந்தர் அஜித் குமார் சதுர்வேதி கூறியதாவது: கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழரின் வாழ்வியல் அறநெறி மற்றும் சமூகக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நூல் கொன்றை வேந்தன். இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் வெறும் இலக்கியப் பரிமாற்றமாக மட்டுமல்லாமல், மொழிகளுக்கு இடையேயான பண்பாட்டு உரையாடலை வலுப்படுத்தும் பாலமாகவும் செயல்படுகின்றன கொன்றை வேந்தனை 40-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயலக மொழிகளில் மொழிபெயர்ப்பது இந்த மொழிபெயர்ப்புப் பட்டறையின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ் உதவிப் பேராசிரியர் ஜெகதீசன் 3 நாள் பயிற்சி பட்டறையில் கொன்றை வேந்தன் நூலின் கருத்துகளை விளக்கி மொழிபெயர்ப்பது எப்படி என்று எடுத்துரைத்தார்.
கலைப்புல முதன்மையர் பேராசிரியர் சுஷ்மா கில்டியால், இந்திய மொழிகள் துறையின் தலைவர் திவாகர் பிரதான், வரலாற்றுத் துறை பேராசிரியர் கங்காதரன், பிரெஞ்சு துறை பேராசிரியர் வசுமதி பத்ரிநாதன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.