புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் குழந்தைகள் நல மருத்துவர் சரத் குப்தா மற்றும் கீர்த்தி துவா ஆகியோர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
சமூக வலைதளங்கள் பாலியல் ரீதியான வெளிப்படையான பல உள்ளடக்கங்களை வெளியிட்டு வருகின்றன. எனவே 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் வி.காமேஷ்வர் ராவ் மற்றும் மன்மீத் ப்ரித்தம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிப்பது என்பது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முறையில் பரிசீலித்து தகுந்த கொள்கை முடிவை எடுக்கலாம்’' என அறிவுறுத்தினர்.