கோப்புப் படம்
திருமலை: திருமலையில் காலிபிளவரில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு, திருப்பதி தேவஸ்தானம் தற்காலிக தடை விதித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது தினமும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாத அறக்கட்டளையின் கீழ், பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், பக்தர்களின் வசதிக்காகத் தனியார் ஓட்டல்களும் திருமலையில் உள்ளன. இங்கு, மதியம்,மாலை, இரவு நேரங்களில் ‘சைனீஷ் புட்’ உணவை உண்ண பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதில் ருசிக்காகச் சில ரசாயனங்கள் கலப்பதாக வந்த புகாரின் அடிப்படியில், சைனீஸ் புட் திருமலையில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலிபிளவர் (கோபி) ரைஸ், பக்கோடா, மஞ்சூரி என பல உணவு வகைகள் பக்தர்களுக்கு ஓட்டல்களில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில ஓட்டல்களில் காலிபிளவரில் புழுக்கள் இருந்ததாகத் தொடர்ந்து புகார் வந்தது.
இதனை தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான சுகாதாரத் துறை அதிகாரி சோமண்ண ரமணா மற்றும் அவருடைய உதவியாளர்கள் திருமலையில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகள், ஓட்டல்கள், பாஸ்ட் புட் மையங்களில் சோதனை நடத்தினர். பின்னர், காலிபிளவர் சம்பந்தப்பட்ட எந்த வகை உணவுகளையும் தயாரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று தற்காலிகமாக உத்தரவிட்டனர். ஆதலால், நேற்று முதல் திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.