இந்தியா

18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவருக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் நிகழ்ந்த கலவர வழக்கில் இர்பான் சிராஜ் படா உள்ளிட்ட 31 பேர் குற்ற வாளிகள் என அறிவிக்கப்பட்டு, அதில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளி 'இர்ஃபான் சிராஜ் படா' இதய ரத்த நாளங்கள் தொடர்பான தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கெனவே 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தனது ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி.வரலே அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுவாதி கில்டியால், இந்த வழக்கு மிகவும் தீவிரமானது என்றாலும், மருத்துவக் காரணங்களுக்காக மனுதாரரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைப்பதை மாநில அரசு எதிர்க்கவில்லை என தெரிவித்தார்.

மனுதாரரின் மருத்துவ ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் மருத்துவப் பாதிப்பு குறித்த தகவல்கள் உண்மைதான் என குஜராத் அரசு தரப்பும் ஒப்புக்கொண்டதைச் சுட்டிக்காட்டி, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் அவரது ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்ததோடு,ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT