மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர் பற்றி விவரித்த கூடுதல் டிஜிபி மகேஷ் சந்திர லத்தா

 
BackPg

ஆந்திர வனப்பகுதியில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஆனந்த்

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் மாரேடுமில்லி காடுகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச்சூடு இது.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டிஜிபி மகேஷ் சந்திர லத்தா, “ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள மாரேடுமில்லி காடுகளில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர் மாத்வி ஹித்மா அவரது மனைவி மதகம் ராஜே உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலின்போது சில மாவோயிஸ்டுகள் தப்பிவிட்டனர்.

இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற மோதலில், 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இவர்களில், 3 பேர் பெண் மாவோயிஸ்டுகள், 4 பேர் ஆண் மாவோயிஸ்டுகள்.

சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் ஆந்திர ஒடிசா எல்லை பகுதிக்கான மத்தியக் குழு பொறுப்பாளரான டெக் சங்கர் என அழைக்கப்படும் மேட்டூரி ஜோகா ராவ் இந்த மோதலில் கொல்லப்பட்டார். இவர் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார். மற்றவர்கள் குறித்து அடையாளம் காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT