புட்டபர்த்தி சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி

 
BackPg

புட்டபர்த்தி சத்திய சாய் பாபா மகாசமாதியில் பிரதமர் மோடி வழிபாடு

ஆனந்த்

புட்டபர்த்தி: ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பாபாவின் மகா சமாதியில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.

ஏராளமான பக்தர்களால் கடவுளாகக் கருதி வழிபடப்படுபவர் புட்டபர்த்தி சாய் பாபா. உலகம் முழுவதிலும் அவரது பக்தர்கள் உள்ளனர். 1926-ம் ஆண்டு நவ.23ம் தேதியில் புட்டபர்த்தியில் பிறந்த சத்திய சாய் பாபா, அதே இடத்தில் ஏப்.24, 2011-ல் உயிர் நீத்தார். அங்கு அவருக்கு மகாசமாதி அமைக்கப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புட்டபர்த்திக்கு வருகை தந்தார். புட்டபர்த்தியில் சாலையின் இரு மருங்கிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் வேத விற்பண்ணர்கள் வேத கோஷங்கள் முழங்க பிரதமர் மோடியை ஆசீர்வதித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, கிஷண் ரெட்டி, மாநில அமைச்சர்கள், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், திரைப் பிரபலம் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோயம்புத்தூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பிற்பகல் 1.30 மணியளவில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், நாட்டில் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை விடுவித்து உரையாற்ற உள்ளார்.

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு குறித்த அரசின் குறிப்பு: இந்த மாநாடு தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது 2025 நவம்பர் 19 அன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நீடித்த, சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசயானம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை துரிதப்படுத்தவதையும் இம்மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது.

வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் ஊரக தொழல் முனைவோர்கள் இடையே சந்தை இணைப்புகளை உருவாக்குதல், இயற்கை வேளாண் முறைகள், வேளாண் பதப்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பேக்கேஜிங், உள்நாட்டு தொழில்நுட்பங்களில் புதுமை கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்படும். இம்மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவோர், விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருட்கள் விநியோகிப்போர், விற்பனையாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் பங்கேற்பார்கள்.

SCROLL FOR NEXT