இந்தியா

200 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை - சாரட்டில் அழைத்து வந்த குடும்பத்தினர்

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில், நான்கு தலை​முறை​களுக்​குப் பிறகு முதன்​முறை​யாக ஒரு பெண் குழந்தை பிறந்​துள்​ளது. சுமார் 200 ஆண்​டு​களாக இந்​தக் குடும்​பத்​தில் பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், இப்​போது பிறந்த குழந்​தைக்கு ‘கார்​கி’ எனப் பெயரிட்டுள்​ளனர்.

மருத்​து​வ​மனை​யில் பிரசவம் முடிந்து வீடு திரும்​பிய தாய் மற்​றும் குழந்​தையை அவர்​களு​டைய குடும்​பத்​தினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்​றனர். குறிப்​பாக, மேள​தாளங்​கள் முழங்க, கிராமிய நடனங்​களுக்கு நடுவே அலங்​கரிக்​கப்​பட்ட சாரட் வண்டியில் தாய், குழந்​தையை ஏற்றி ஊர்​வல​மாக வீட்டுக்கு அழைத்து வந்​தனர்.

குழந்​தை​யின் தாத்தா லிம்​பாஜி தஹி​பாலே உணர்ச்​சிவசப்​பட்டு கூறும்​போது, “குடும்​பத்​தில் ஒரு பெண் குழந்தை பிறப்​பது பெரும் பாக்​கி​யம். பல ஆண்​டு​களாக பெண் இல்​லாத குறை இருந்​தது, இன்று அது நிறைவேறி​யுள்​ளது” என்​றார்.

தன்​னுடைய இரு மரு​மகள்​களை​யும் சொந்த மகள்​களைப் போலவே நடத்தி வந்​த​தாக​வும், பேத்​தியை தேரில் இசை​யுட​னும் நடனத்​துட​னும் வீட்​டுக்கு அழைத்து வந்​த​தில் மகிழ்ச்சி அடைவதாக​வும் அவர் தெரி​வித்​தார். குழந்​தை​யின் பாட்டி சுரேகா தஹிபாலே கூறும்​போது, “இன்று எங்​கள் வீட்​டுக்கு லட்​சுமி வந்திருக்​கிறாள் என்​ப​தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

குழந்​தை​யின் தந்தை கூறும்​போது, “பொது​வாக மக்​கள் ஆண் குழந்​தையையே விரும்​பு​வார்​கள், ஆனால் பெண் குழந்தை பெறும் உணர்​வும் மகிழ்ச்​சி​யும் வேறு வித​மானது. மகள்​கள் தந்தை​யிடம் அதிக பாசம் கொண்​ட​வர்​கள். எங்​கள் மகளை ஒரு மலரைப் போல வளர்ப்​போம்” என்​றார்.

இந்​நிகழ்​வைப் பாராட்​டிய சமூக ஆர்​வலர் அனந்த் இங்​லே, சமூகத்​தில் இன்​னும் சில பிரி​வினரிடையே பெண் குழந்தை குறித்து குறுகிய மனநிலை நில​வுகிறது. ஆனால், தஹி​பாலே குடும்​பம் கார்​கி​யின் பிறப்​பைக் கொண்​டாடி, சமூகத்​துக்கு நேர்​மறை​யான செய்​தியை அனுப்​பி​யிருப்​ப​தாக அவர்​ பா​ராட்​டி​னார்​.

SCROLL FOR NEXT