அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் தொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா அண்மையில் ராஜினாமா செய்தனர். அயோத்தியில் நேற்று நடைபெற்ற அறக்கட்டளை கூட்டத்தில் இருவரது ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டன.
அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, காணிக்கை பணம் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சார்பில் கடந்த ஜூன் 15-ம் தேதி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) நியமிக்கப்பட்டது.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜய் விஷ்வாஸ், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கிரண், நிதித் துறை சிறப்பு செயலாளர் நீல் ரத்தன் உள்ளிட்டோர் அடங்கிய எஸ்ஐடி குழுவினர் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், மூத்த அதிகாரிகள், ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த ஜூன் 23-ம் தேதி எஸ்ஐடி சார்பில் உத்தர பிரதேச அரசிடம் 20 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சூழலில், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் கடந்த 26-ம் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். காணிக்கை பெட்டி பொறுப்பாளர் ராம்சங்கர் யாதவ், காணிக்கை பணம் எண்ணும் பிரிவை சேர்ந்த அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, சுபாஷ் சந்திர வஸ்தவா, கருணேஷ் பாண்டே, மணீஷ் யாதவ், அவினாஷ் சுக்லா, ராம்சங்கர் மிஸ்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய், உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவி விலகிய நிலையில் அறக்கட்டளை கூட்டம் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க சம்பத் ராய் சென்றார். ஆனால் அவர் அனுமதிக்கப்படவில்லை.
இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் சம்பத் ராய், உறுப்பினர் அனில் மிஸ்ராவின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டன. ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் மூத்த அதிகாரியும் அறக்கட்டளை உறுப்பினருமான கிருஷ்ண மோகன் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சுமார் 3 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தை சேர்ந்த அறக்கட்டளை உறுப்பினர் கே.பராசரன்: சம்பத் ராய், அனில் மிஸ்ராவின் ராஜினாமா கடிதங்கள் கூட்டத்தில் ஏற்கப்பட்டன. அறக்கட்டளையின் அடுத்த கூட்டம் 22-ம் தேதி நடைபெறும்.
அறக்கட்டளையின் புதிய பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகன்: கோயில் நிர்வாக சீர்கேடுகள் களையப்படும். தற்போதைய பிரச்சினையால் கோயில் நிர்வாகம் மீது அவநம்பிக்கை எழுந்திருக்கிறது. இந்த நிலையை மாற்றி மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவோம். சிறப்பு அழைப்பாளர் பதவியில் இருந்து கோபால் நகரகட்டே நீக்கப்பட்டுள்ளார். நன்கொடை திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மோசடி செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் கிரி: ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 தங்க, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அவை திருடப்படவில்லை. அவற்றை செய்தியாளர்கள் முன்பு காட்சிக்கு வைத்திருக்கிறோம். சிலர் (அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர்) அரசியல் லாபத்துக்காக திடீரென ராம பக்தர்களாக மாறி கோயில் நிர்வாகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சில சுயநலத்துக்காக பொய் புகார்களை சுமத்தி வருகின்றனர். அனைத்து சதிகளையும் முறியடிப்போம்.
பொதுச் செயலாளர் சம்பத் ராய் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அவர் சார்ந்த நபர்கள் தவறுகளை செய்துள்ளனர். அவர் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். 3 பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு புதிய அறங்காவலர்களை நியமனம் செய்யும்.
ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கப் புத்தகம் ‘ராமசரிதமானஸ்’ திருடப்படவில்லை
மத்திய அரசின் முன்னாள் உள்துறை செயலரான லட்சுமி நாராயணா கடந்த 2024 -ம் ஆண்டு ஏப்ரலில் ராமர் கோயிலுக்கு சென்றார். அப்போது, தங்க முலாம் பூசப்பட்ட 522 பக்க ‘ராமசரிதமானஸ்’ புனித நூலை (147 கிலோ) சம்பத் ராயிடம் அளித்ததாகவும், அந்த நூலை தற்போது காணவில்லை என்றும் லட்சுமி நாராயணா குற்றம் சாட்டினார். இந்த சூழலில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் கிரி நேற்று செய்தியாளர்களிடம் காண்பித்த 5 பொருட்களில் புனித நூலும் இருந்தது. ரூ.5 கோடி மதிப்புள்ள ‘ராமசரிதமானஸ்’ தங்கப் புத்தகம் பாதுகாப்பாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.