லக்னோ: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உத்தரப் பிரதேச காவல் துறையினர் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்றும் நகைகள் காணாமல்போனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இந்நிலையில், எஸ்ஐடி தனது 20 பக்க இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அறக்கட்டளை மற்றும் வங்கியுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உட்பட சுமார் 150 பேரிடம் சிறப்புக் குழு விசாரணை நடத்தியுள்ளது. மேலும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மறு சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்தது.
கைதான 8 பேர் யார், யார்?
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவினாஷ் ஷுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மணிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமஷங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, ராம் ஷங்கர் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அடையாளம் தெரியாத பலர் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.
திருட்டு, நம்பிக்கை துரோகம், திருடப்பட்ட சொத்தைப் பெறுதல் அல்லது மறைத்தல், சதி என பிஎன்எஸ் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவின் கீழும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.