புதுடெல்லி: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட 105 சம்பவங்கள் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோயிலில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காணிக்கை திருட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ராமர் கோயில் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். முன்னாள் ராணுவ அதிகாரியான ஜிதேந்திர மிஸ்ரா தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மணீஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமசங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் டின்னு ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணையின்போது.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “காணிக்கை திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்ஐடி அறிக்கையை மேற்கோள் காட்டி, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட 105 சம்பவங்கள் கோயில் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. எஸ்ஐடி-யின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 25-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார்.
முன்னதாக, வழக்கை விசாரித்தபோது, எஸ்ஐடி தாக்கல் செய்த நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது. விசாரணையின்போது, இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணிக்கை திருட்டு தொடர்பாக என்னென்ன ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
சிசிடிவி காட்சிகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் தொடர்பான விவரங்களும் நீதிமன்றத்தில் பகிரப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆவணங்கள் எவ்வாறு ஆய்வு செய்யப்பட்டன என்பது குறித்த விவரங்களும் நிலவர அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. அதை உச்சநீதிமன்றம் பதிவுசெய்து கொண்டது.
செப்டம்பர் 25-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் மேலும் இருவர் கைதாக உள்ளனர். இந்த வழக்கில் செப்டம்பர் 25-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. அயோத்தி ஸ்ரீராமர் கோயில் காணிக்கை திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எஸ்ஐடி தனது விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க இரண்டாவதாக ஒரு எஸ்ஐடியை உத்தர பிரதேச அரசு நியமித்தது.
அதன் விசாரணையில் மேலும் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி இந்த வழக்கில் மேலும் இருவர் விரைவில் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஜூன் 25-ல் பதிவான இந்த வழக்குக்கான 90 நாள் காலக்கெடு செப்டம்பர் 25-ல் முடிவடைகிறது.
எனவே செப்டம்பர் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யக் காவல் துறை தயாராகி வருகிறது. இதனிடையே, ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சிஇஒ ஜிதேந்திரா மிஸ்ரா தகுதியற்றவர்களை் பணிநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறார்.