புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த போலீஸார் 4 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர். ஒரு வழக்கில் லஞ்சமாக ரூ.2.80 லட்சம் பெற வந்தவர்கள் கையும் களவுமாகச் சிக்கினர்.
ராஜஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏசிபி) சிகார் பிரிவின் ஒரு குழுவினர் நேற்று ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில், உ.பி-யின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று காவலர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்கள், ரூ.2.80 லட்சம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டனர். இந்த விவகாரம் அயோத்தியின் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு சம்மந்தப்பட்டது.
ராஜஸ்தானின் சிகார் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அயோத்தி போலீஸார் சம்மன் ஒன்றை அனுப்பி, விசாரணைக்காக அயோத்திக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். சைபர் மோசடி வழக்கில் அவரை சிறைக்கு அனுப்புவதாகவும் அந்த நபரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், வழக்கிலிருந்து அவரின் பெயரை நீக்குவதற்குப் பதிலாக, போலீஸார் முதலில் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். பின்னர், அந்தத் தொகை ரூ.2.80 லட்சமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. தன் மீது தவறில்லை என்பதால், இது குறித்து பாதிக்கப்பட்ட நபர், ராஜஸ்தான் ஏசிபியிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி அன்று, விசாரணை நடத்தி லஞ்சம் கேட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிறகு, ஆகஸ்ட் 18-ம் தேதி (நேற்று) அன்று ராஜஸ்தானின் ஏசிபி இருவர், அயோத்தி போலீஸாருக்கு ஒரு பொறி வைத்தனர். ரூ.2.80 லட்சம் லஞ்சத் தொகையைப் பெறுவதற்காக சிகாருக்கு வரவழைத்தனர். புகார்தாரரிடமிருந்து பணப் பையை அயோத்தி காவலர் சோகன் லால் வாங்கியதும், அங்கு மறைந்திருந்த போலீஸார் நான்கு காவலர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் யஷ்வந்த் சிங், காவலர் பவன் குமார் திரிபாதி, சோகன் லால் மற்றும் கவுரவ் சார்ஜ் ஆகியோர் சிக்கியுள்ளனர். ராஜஸ்தானில் நடந்த இந்த நடவடிக்கையை அறிந்த உத்தரப் பிரதேச காவல் துறை அதிர்ச்சியடைந்தது.
இவ்விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கருதிய அயோத்தி மாவட்ட எஸ்எஸ்பி கவுரவ் குரோவர், குற்றம்சாட்டப்பட்ட நான்கு காவலர்களையும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் உ.பி-யில் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடபட்டுள்ளது.