இந்தியா

“மொழி, பிராந்தியவாதம் மூலம் நாட்டில் பிளவுகளை விதைக்க முயற்சி” - சிக்கிமில் பிரதமர் மோடி பேச்சு

வெற்றி மயிலோன்

காங்டாக்: மொழி மற்றும் பிராந்திய அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், சிக்கிம் 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

காங்டாக்கில் உள்ள பால்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்ற 50-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று நாம் சிக்கிமின் 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். ஒரு நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும், இத்தகைய தெய்வீகமான சூழலில் நடைபெறும்போதும், அதன் மகத்துவம் பன்மடங்கு பெருகுகிறது. இந்த மைதானம் அந்த அற்புதமான ஒளிவட்டத்தால் நிரம்பியுள்ளது. கலைஞர்களையும் நடன அமைப்பாளர்களையும் நான் வாழ்த்துகிறேன். ஊடகங்கள் இந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அரசியல் நலன்களுக்காக, மொழிவாதம், பிராந்தியவாதம் மற்றும் சமூகப் படிநிலை போன்றவற்றின் அடிப்படையில் நாட்டில் பிளவுகளை விதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ஒரு காலகட்டத்தில், ஒரே இந்தியா, மாபெரும் இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையின் உண்மையான ஒரு காட்சியை சிக்கிம் இன்று நமக்கு வழங்கியுள்ளது. இந்தச் சிறிய நிகழ்ச்சியில், அவர்கள் நமது தேசத்தின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்றிரவு மழையும், இப்போது சூரிய ஒளியும். சிக்கிமின் வண்ணங்கள் உண்மையிலேயே தனித்துவமானவை. சிக்கிம் கிழக்கின் பெருமை.

எனது சாலைப் பேரணியின் போது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் எதுவென்றால், அது சிக்கிமின் சாலைகளில் நிலவிய தூய்மைதான். இதற்காக உங்கள் அனைவருக்கும் நான் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிக்கிம் மக்கள் இயற்கையின் உண்மையான தூதுவர்களாகத் திகழ்கின்றனர். எனவே, நாட்டின் மக்கள் அனைவரும் சிக்கிமிற்கு வருகை தருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

முன்னதாக இன்று, சிக்கிம் மாநிலம் உருவானதன் 50-வது ஆண்டு நிறைவு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சிக்கிமில் 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தும், அவற்றுக்கான அடிக்கல்லை நாட்டியும் வைத்தார்.

SCROLL FOR NEXT