கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி முதல்வர் மம்தா தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் மேற்குவங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று முன்தினம் புரூலியாவில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு இரவு மிட்னாபூருக்கு காரில் சென்றார்.
அப்போது அவரது காரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மேற்குவங்கம் முழுவதும் பாஜக தொண்டர்கள் நேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதுதொடர்பாக திரிணமூல் செய்தித் தொடர்பாளர் ஆருப் சக்கரவர்த்தி கூறும்போது, “சுவேந்து அதிகாரிகாரில் சென்றபோது, “ஜெய் பங்களா” என்றுதான் எங்கள் தொண்டர்கள் குரல் எழுப்பினர். அதை கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.
சுவேந்து அதிகாரி கூறும்போது, “ஐபேக் நிறுவனத்தில் நடந்த சோதனையை திசை திருப்ப சுரங்க ஊழலில் எனக்கு தொடர்பு இருப்பதாக என் மீது பொய் குற்றச்சாட்டுகளை மம்தா சுமத்துகிறார். அவர் ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்” என்று எச்சரிக்கை விடுத்தார்.