இந்தியா

“நேருவின் அர்ப்பணிப்புக்கு அவர் மீதான விமர்சனங்களே சான்று” - பிரியங்கா காந்தி பதிலடி

மோகன் கணபதி

புதுடெல்லி: ‘ஜவஹர்லால் நேரு மறைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் அழிக்கத் துடிப்பவர்கள் இன்றும் அவரை விமர்சிக்கிறார்கள். இதுவே அவர் இந்தியா மீது கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்று.’ என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்ற பழைய கட்டிட வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவப் படத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து ஜவஹர்லால் நேருவின் நினைவிடமான சாந்தி வனத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘நவீன இந்தியாவின் முதன்மைச் சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு. நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசத்தை ஜனநாயகத்தால் மட்டுமே ஒன்றிணைக்க முடியும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகள், அரசியல் கருத்துகள் மற்றும் அபிலாஷைகளை உள்ளடக்கிய ஜனநாயகம் அது.

அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் வேளையில், நமது அரசியலமைப்பையும், ஜனநாயக நிறுவனங்களையும், நம்மை ஒன்றிணைக்கும் விழுமியங்களையும் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் மீண்டும் உறுதியேற்போம். இதுவே, நேரு விட்டுச் சென்ற அழியாத மரபு. இதனைப் பாதுகாப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு.” என தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நேருவின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, ‘சுதந்திரம் என்பது அவருக்கு ஒரு இலக்காக மட்டும் இருக்கவில்லை. அது தேசத்தின் புதிய பணயத்தில் ஒரு மைல்கல்லாகவே இருந்தது. சுயராஜ்யம் என்பது அதிகாரத்தைப் பற்றியது அல்ல; மாறாக நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்பதையும் பொறுப்பேற்பதையும் குறிப்பது அது.

அவரைப் பொறுத்தவரை இந்தியா என்பது ஒரு தேடல், ஒரு சிந்தனை. பன்முகத்தன்மை அதன் பலமாகவும், ஜனநாயகம் அதன் நம்பிக்கையாகவும், சமத்துவம் அதன் அடித்தளமாகவும் அமைந்திருந்தது. நவீன, அறிவியல் பூர்வமான, முன்னேற்றமடைந்த, தன்னம்பிக்கைக் கொண்ட இந்தியா குறித்த அவரது கனவு, இன்றும் நமக்கு ஊக்கமளிக்கிறது. அத்தகைய இந்தியாவை உருவாக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.’ என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஜவஹர்லால் நேரு ஒரு தனித்துவமான மனிதர். அவர் ஒரு புரட்சியாளர், தொலைநோக்குப் பார்வை மற்றும் தேசத்தை உருவாக்கிய சிற்பி.

அவர் மறைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் அழிக்கத் துடிப்பவர்கள் இன்றும் அவரை விமர்சிக்கிறார்கள் என்றால் அது இந்தியா மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்குச் சான்றாகும். நமது நாட்டின் மீது அவர் கொண்டிருந்த அன்பு எப்போதும் நமக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.” என தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT