புவனேஸ்வர்: ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நகருக்குப் புறப்பட்ட சிறிய ரக தனியார் பயணிகள் விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதில் விமானத்தில் இருந்த 6 பேரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை வழங்கும் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் இந்த விமானத்தை இந்தியா ஒன் ஏர் விமான நிறுவனம் இயக்கியது.
புவனேஸ்வரில் இருந்து புறப்பட்ட 50 நிமிடங்களுக்குள், விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி புகார் அளித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியா ஒன் ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களுக்குப் பிறகு விமானப் பணியாளர்கள் தொழில்நுட்பச் சிக்கல் குறித்து புகார் அளித்தனர்.
மேலும், பாதுகாப்பு நடைமுறைகளின்படி மே-டே (விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதனை தெரிவிக்கும் சங்கேத வார்த்தை) அழைப்பை விடுத்தனர். அதேநேரத்தில், விமானிகள் உறுதியுடனும் தொழில்முறை திறனுடனும் செயல்பட்டு மதியம் 1.20 மணி அளவில் ரூர்கேலாவில் இருந்து சுமார் 15-20 கிலோ மீட்டர் தொலைவு உள்ள ஒரு வெட்டவெளி பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர்.
விமானத்தில் இரண்டு பணியாளர்களும், நான்கு பயணிகளும் இருந்தனர். விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் ஒன்பது இருக்கைகள் கொண்ட செஸ்னா கிராண்ட் கேரவன் வகையைச் சேர்ந்தது.